1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 12 ஜனவரி 2022 (12:59 IST)

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு ஜாமீன் – உச்சநீதிமன்றம் உத்தரவு!

பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜிக்கு ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக பலரிடம் ரூ.3 கோடி வரை பணமோசடி செய்ததாக முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் ராஜேந்திர பாலாஜி தலைமறைவான நிலையில் தனிப்படை அமைத்து தேடிய போலீஸார் கர்நாடகாவில் பதுங்கியிருந்த ராஜேந்திர பாலாஜியை கைது செய்தனர்.

இதனிடையே முன்னதாக இந்த வழக்கு தொடர்பாக ராஜேந்திரபாலாஜி தரப்பில் தொடரப்பட்ட முன்ஜாமீன் மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் இருந்தது. இந்நிலையில் ராஜேந்திர பாலாஜி ஜாமீன் மனு மீதான விசாரணையில் தற்போது அவருக்கு 4 வார இடைக்கால ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதேசமயம் விசாரணைகளுக்கு ராஜேந்திர பாலாஜி ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும், பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.