1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 3 ஜூலை 2020 (17:28 IST)

அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு மீண்டும் கட்சி பதவி: என்ன நடந்தது?

பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை அதிமுகவின் விருதுநகர் மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து நீக்கி கடந்த மார்ச் மாதம் அதிமுக தலைமை அதிரடியாக அறிவித்தது. அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் சர்ச்சையான நடவடிக்கைகள் மற்றும் பேட்டிகள் அதிமுக தலைமைக்கும் முதல்வர் பழனிசாமிக்கும் நெருக்கடியை ஏற்படுத்தியதாகவும் அதன் காரணமாக ராஜேந்திர பாலாஜியின் பதவி பறிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. எனினும் பதவி நீக்கத்திற்கான காரணத்தை அதிமுக தலைமை தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் அதிமுகவின் விருதுநகர் மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட்ட மூன்றே மாதங்களில் அதே பதவியை மீண்டும் அவருக்கே கொடுக்க தற்போது அதிமுக தலைமை முன்வந்துள்ளது,.
 
அதிமுக தலைமையிடம் இருந்து சற்றுமுன் வெளியான தகவலின்படி விருதுநகர் மாவட்ட அதிமுக பொறுப்பாளராக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நியமனம் செய்யப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் மாவட்ட செயலாளர் பொறுப்பிற்கு வேறு ஒருவரை நியமிக்கும் வரை ராஜேந்திர பாலாஜி பொறுப்பாளராக இருப்பார் என ஓபிஎஸ்-இபிஎஸ் அறிவித்துள்ளதால் அவருக்கு அளிக்கப்பட்டிருக்கும் பொறுப்பு தற்காலிகமானது என்றும் கூறப்படுகிறது