கொரோனா நேரத்திலும் குழப்பம் செய்கிறார் ஸ்டாலின் – அமைச்சர் காட்டம்!
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு சரியாக மேற்கொள்ளவில்லை என்ற மு.க.ஸ்டாலினின் குற்றச்சாட்டினை அதிமுக அமைச்சர்கள் மறுத்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை அரசு மெத்தன போக்குடன் கையாள்வதாகவும், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை குறைத்து கூறுவதாகவும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை வைத்து வருகின்றனர். ஸ்டாலின் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்து அதிமுக அமைச்சர்கள் விளக்கம் அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் பேசியுள்ள அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ”கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கொரோனாவால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள இந்த இக்கட்டான சூழலிலும் கூட ஸ்டாலின் தவறான கருத்துகளை கூறி மக்களை குழப்பி வருகிறார். அவரது இந்த குற்றச்சாட்டு அனுதினமும் கொரோனாவை எதிர்த்து பணியாற்றி வரும் ஊழியர்களை சோர்வடைய செய்யும்” என தெரிவித்துள்ளார்.
மேலும் “கொரோனா தமிழகத்தில் தீவிரமடைய தொடங்கியிருந்த காலத்தில் ஸ்டாலின் இரண்டாயிரம் பேரை சேர்த்துக் கொண்டு போராட்டம் நடத்திக் கொண்டிருந்தார்” என்று குற்றம் சாட்டியுள்ளார்.