ஞாயிறு, 13 அக்டோபர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : திங்கள், 30 செப்டம்பர் 2024 (13:52 IST)

மழைநீர் கால்வாயில் விழுந்து இளைஞர் பலி.! "உயிரிழப்புக்கு நிர்வாகச் சீர்கேடே காரணம்" - இபிஎஸ்...

edapadi
மழைநீர் கால்வாயில் விழுந்து இளைஞர் ஒருவர் பலியான சம்பவத்திற்கு, ஸ்டாலினின் தி.மு.க அரசின் சென்னை மாநகராட்சியின் நிர்வாகச் சீர்கேடே காரணம் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார்.
 
இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, ‘சென்னை, அசோக் நகரில் சாலையோரம் உரிய வழிமுறைகளை பின்பற்றாமல், முறையாக தடுப்புகள் வைக்கப்படாத நிலையில் இருந்த, மழைநீர் கால்வாயில், அம்பேத்கர் நகரைச் சேர்ந்த ஐயப்பன் என்பவர் தவறிவிழுந்து மரணமடைந்துள்ளார். அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல்.
 
குண்டும் குழியுமான சாலைகள், நிரம்பி வழியும் கழிவு நீர் குழாய்கள், குடிநீர் குழாய்களில் கலக்கும் கழிவு நீர், நேற்று முன்தினம் பெய்த 10 செ.மீ. மழைக்கே பல் இளிக்கும் மழைநீர் வடிகால் அமைப்பு, வெள்ள நீரால் நிரம்பி வழிந்த சாலைகள், மழை நீரால் கொசு உற்பத்தி கேந்திரமாக மாறியுள்ள பல மாநகராட்சி பூங்காக்கள் என அவல நிலையில் வைத்திருக்கும் ஸ்டாலினின் தி.மு.க அரசின் சென்னை மாநகராட்சியின் நிர்வாகச் சீர்கேடே இத்துயரச் சம்பவத்திற்கு காரணம். 
 
இம்மரணத்திற்கு தமிழக மக்கள் மீது சிறிதும் அக்கறையில்லாத, குடும்ப நலனையே பிரதானமாக கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் முழுப் பொறுப்பை ஏற்க வேண்டும். இறந்தவர் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் அரசு நிவாரணம் வழங்கவும், தவறிழைத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இனி இதுபோன்ற நிகழ்வு எங்கும் நடைபெறா வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும் தி.மு.க முதல்வரை வலியுறுத்துகிறேன் என்று எடப்பாடி பழனிச்சாமி பதிவிட்டுள்ளார்.