ஞாயிறு, 13 அக்டோபர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : திங்கள், 30 செப்டம்பர் 2024 (13:31 IST)

அமைச்சராக பதவியேற்ற பின் ED அலுவலகத்தில் கையெழுத்திட்ட செந்தில் பாலாஜி..!

senthil balaji
அமைச்சராக பதவி ஏற்ற பிறகு, செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி முதன்முறையாக கையெழுத்திட்டார்.
 
சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமைச்சராக இருந்த  செந்தில் பாலாஜி கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14ஆம் தேதி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். 471 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த செந்தில் பாலாஜிக்கு கடந்த வாரம் உச்ச நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் செந்தில் பாலாஜி கடந்த 26ம் தேதி சிறையில் இருந்து வெளியே வந்தார்.  
 
திங்கள் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு நேரில் சென்று கையெழுத்திட வேண்டும், வழக்கின் சாட்சியங்களை கலைக்கும் நடவடிக்கையில் ஈடுபடக் கூடாது, பாஸ்போர்ட் ஒப்படைக்க வேண்டும், மாதத்தின் முதல் சனிக்கிழமை விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என உச்ச நீதிமன்றம் நிபந்தனை விதித்திருந்தது. 
 
ஜாமீனில் வெளிவந்த பிறகு கடந்த 27 ம் தேதி காலை 11 மணியளவில் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி முதன்முறையாக கையெழுத்திட்டார். அதன்பிறகு செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் பொறுப்பு நேற்று வழங்கப்பட்டது.  

 
இந்நிலையில் அமைச்சரான பிறகு முதன்முறையாக கையெழுத்திட இன்று காலை 10:44 மணியளவில் அமைச்சர் செந்தில்பாலாஜி நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார். தனது சொந்த வாகனத்தில் எவ்வித பாதுகாப்பும் இன்றி தனியாக வந்து கையெழுத்திட்டுச் சென்றார்.