கன்னியாகுமரியில் ராகுல் பெயரில் விருப்பமனு – போட்டியிடுவாரா ?
தமிழகத்தில் கன்னியாகுமரி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிட வேண்டும் எனக் கூறி காங்கிரஸ் தொண்டர்கள் விருப்பமனுத் தாக்கல் செய்துள்ளனர்.
கடந்த சில தேர்தல்களாக தமிழகத்தில் வீழ்ச்சியை சந்தித்து வரும் காங்கிரஸ் இந்த நாடாளுமன்றத் தேர்தலிலாவது தன்னைப் புதுப்பித்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அதற்கேற்றவாறு கூட்டணிக் கட்சியான திமுக விடம் தொகுதிகளைக் கேட்டு பெற்றுள்ளது. பாஜக மற்றும் அதிமுக அரசு மீது மக்களுக்கு உள்ள அதிருப்தியால் இம்முறைக் காங்கிரஸுக்கு தமிழகத்தில் வெற்றிப்பெற அதிக வாய்ப்புகள் உள்ளதாகக் கூறப்படுகிறது.
காங்கிரஸ் பெற்றுள்ள தொகுதிகளில் கன்னியாகுமரியும் ஒன்று. கன்னியாகுமரி நீண்டகாலமாக காங்கிரஸின் கட்டுப்பாட்டில் இருந்த தொகுதி. கடந்த ஆண்டு ஓகிப் புயலின் போது மக்களை உடனடியாக சென்று களத்தில் சந்தித்து ராகுல் காந்தி ஆறுதல் கூறினார். அதனால் அங்குள்ள மீனவ மக்களுக்கு ராகுல் காந்தி மீது நல்ல அபிப்ராயம் உள்ளதாகத் தெரிகிறது. இவற்றையெல்லாம் கணக்குப் போட்டுப் பார்த்து வெற்றிப் பெறுவதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கும் தொகுதியாகக் கன்னியாகுமரியை குறிப்பிட்டு ஏற்கனவே ராகுலுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாகக் காங்கிரஸ் வட்டாரத்தில் செய்திகள் உலாவந்து கொண்டிருந்தன.
இந்நிலையில் இப்போது காங்கிரஸ் கட்சி சார்பில் விருப்பமனுக்கள் பெற்றுக்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் கன்னியாகுமரி தொகுதியில் ராகுல்காந்தி நிற்கவேண்டுமென தொண்டர்கள் விருப்பம் தெரிவித்து அவரது பெயரில் விருப்பமனுத் தாக்கல் செய்துள்ளனர். முதல் விருப்பமனுவாக ராகுலின் விருப்பமனு பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் ராகுல் வட இந்தியாவை விட்டு தென் இந்தியாவில் உள்ள ஒரு தொகுதியில் நிற்பாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.