கனடா ஒருபோதும் அமெரிக்காவின் பகுதி ஆகாது.. புதிய பிரதமர் மார்க் கார்னி அதிரடி..!
கனடாவை அமெரிக்காவின் ஒரு பகுதியாக இணைக்க வேண்டும் என அதிபர் டொனால்டு டிரம்ப் தொடர்ந்து கூறி வரும் நிலையில், இன்று புதிதாக பொறுப்பேற்ற கனடா பிரதமர் மார்க் கார்னி "கனடா ஒருபோதும் அமெரிக்காவின் ஒரு பகுதியாக மாறாது" என்று அதிரடியாக தெரிவித்துள்ளார்.
கனடா பிரதமர் ஜஸ்டின் ரூடோ கடந்த ஜனவரி மாதம் ராஜினாமா செய்த நிலையில், மார்க் கார்னி தற்போது புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கிடையில், கனடாவை அமெரிக்காவின் 51வது மாகாணமாக மாற்ற வேண்டும் என டொனால்ட் டிரம்ப் வலியுறுத்தி வருகிறார். அதுமட்டுமில்லாமல், அந்நாட்டின் மீது வரிகளை அதிகமாக சுமத்தியும் வருகிறார்.
இந்நிலையில், புதிய பிரதமர் மார்க் கார்னி "நாங்கள் தயாரிக்கும் பொருட்கள், விற்கும் பொருட்கள், எங்கள் வாழ்வாதாரத்தின் மீது டொனால்ட் டிரம்ப் நியாயமற்ற வரிகளை விதித்துள்ளார். கனடாவின் குடும்பங்கள், தொழிலாளர்கள், வணிகர்கள் மீது அதிக சுமை வைத்துள்ளார். ஆனால், அவரை வெற்றி பெற அனுமதிக்க மாட்டோம்.
இந்த போராட்டத்தை நாங்கள் தொடங்கவில்லை. ஆனால் யாராவது கனடியர்களை தொந்தரவு செய்தால், அந்த நபரை அவர்கள் சும்மா இருக்க விடமாட்டார்கள். அமெரிக்கா, கனடா அல்ல. அதேபோல், கனடா ஒருபோதும் எந்த விதத்திலும் அமெரிக்காவின் ஒரு பகுதியாக மாறாது!" என்று உறுதியாக கார்னி தெரிவித்துள்ளார்.
Edited by Siva