செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 30 அக்டோபர் 2019 (20:14 IST)

சுஜித் மீட்புப்பணிக்கு ரூ.11 கோடி செலவா? ராதாகிருஷ்ணன் விளக்கம்!

திருச்சி மாவட்டம் நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்த சுஜித் என்ற சிறுவன் ஆள்துளை கிணற்றில் விழுந்து 4 நாட்களாக உயிருக்கு போராடிய நிலையில், நேற்று பிணமாக மட்டுமே மீட்கப்பட்டான். அந்த சிறுவனின் மறைவு தமிழகத்தையே உலுக்கியது.
 
இந்த நிலையில் சுஜித்தை உயிருடன் காப்பாற்ற தமிழக மற்றும் மத்திய அரசின் பல்வேறு துறையினர் இரவு பகலாக பாடுபட்டனர். தீபாவளி கூட கொண்டாடாமல் அரசு அதிகாரிகளும், அமைச்சர்களும், துணை முதல்வரும், எம்பிக்கள் மற்றும் எம்.எல்.ஏக்களும் நடுக்காட்டுப்பட்டியில் சுஜித் குறித்த நல்ல செய்தி வராதா? என்று காத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் சுஜித்தை மீட்பதற்காக பல்வேறு உபகரணங்கள் மற்றும் இயந்திரங்கள் கொண்டு வந்ததில் லட்சக்கணக்கில் செலவு ஆகியதாகக் கூறப்படுகிறது. இருப்பினும் இதுகுறித்த கணக்கு எதுவும் வெளியாகவில்லை. இந்த நிலையில் சுஜித் மீட்புப்பணிக்காக ரூ.11 கோடி செலவானதாக வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஒரு வதந்தி பரவி வருகிறது
 
இந்த வதந்தி குறித்து பேரிடர் நிர்வாக இயக்குநர் ராதாகிருஷ்ணன் அவர்கள் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது: ஒரு பேரிடர் நிகழும் போது அதன் மீட்பு பணியில் மட்டுமே அனைத்து துறையினரும் கவனமாக இருப்பார்களே தவிர அதில் பணம் ஒரு பொருட்டாக இருக்காது என்றும், இதுவரை சுஜித் மீட்பு பணிக்கு எந்த துறையினரும் பில் அனுப்பவில்லை என்றும், எனவே ரூபாய் 11 கோடி மீட்பு பணிக்காக செலவு ஆனதாக வெளிவந்து கொண்டிருக்கும் செய்தி முற்றிலும் பொய்யானது என்றும், இந்த செய்தி முற்றிலும் வதந்தி என்றும் இந்த வதந்தியை யாரும் நம்ப வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்