குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு: தங்க பதக்கம் வாங்க மறுத்த மாணவி!
குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதிகாரிகள் அனுமதிக்க மறுத்ததை கண்டித்தும் தனது தங்க பதக்கத்தை மாணவி வாங்க மறுத்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி பல்கலைகழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவிற்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வருகை புரிந்தார். பல்கலைகழகத்தில் குடியுரிமை சட்டத்திற்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கக்கூடும் என்பதால் விசாரித்த பின்னே அதிகாரிகள் உள்ளே அனுமதித்திருக்கிறார்கள்.
கேரளாவை சேர்ந்த மாணவி ரபிஹா புதுச்சேரி பல்கலைகழகத்தில் தகவல் தொடர்பியல் படித்து வந்துள்ளார். பட்டமளிப்பு விழாவில் அரங்கத்திற்குள் இருந்த ரபிஹாவை காவல்துறை அதிகாரிகள் வெளியே அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர். அவர் குடியுரிமை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டதால் அவரை உள்ளே விடாமல் வெளியே தடுத்து நிறுத்தி வைத்திருக்கிறார்கள்.
குடியரசு தலைவர் பட்டங்களை வழங்கி விட்டு சென்ற பிறகே அவரை உள்ளே அனுமதித்திருக்கிறார்கள். தகவல் தொடர்பியல் முதுநிலையில் தங்க பதக்கம் வென்ற ரபிஹா தனக்கு குடியரசு தலைவர் சென்ற பிறகு அளித்த பதக்கத்தை வாங்க மறுத்துள்ளார். குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதிகாரிகள் தன்னை நடத்திய விதத்திற்கு கண்டனம் தெரிவித்தும் தான் அந்த பட்டத்தை பெற போவதில்லை என மாணவி ரபிஹா கூறியுள்ளார்.