1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By ஜெ.துரை
Last Modified: செவ்வாய், 21 நவம்பர் 2023 (10:01 IST)

மயான வசதி ஏற்படுத்தி தர கோரி இறந்தவரின் உடலுடன் போராட்டம்!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ஏ.ஆண்டிபட்டி கிராமத்தில் வசிக்கும் பட்டியலின் மக்களுக்கு கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக முறையான மயான வசதி இல்லை என கூறப்படுகிறது.

மயான வசதி இல்லாததால் இறப்பவர்களின் உடல்களை கிராமத்திற்கு செல்லும் சாலையின் ஓரத்திலேயே வைத்து திறந்த வெளியில் எரியூட்டுவதை வழக்கமாக கொண்டுள்ள அவல நிலை நீடித்து வருகிறது.

இந்த கிராமத்தில் வசிக்கும் பட்டியலின மக்களுக்கு முறையான இடம் ஒதுக்கீடு செய்தோ இல்லது தற்போது எரியூட்டும் இடத்திற்கு அருகிலேயே உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி மயானத்திற்கு இடம் வழங்க வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் இன்று அதே ஊரைச் சேர்ந்த 106 வயது முதியவரான வெள்ளையன் என்பவர் உயிரிழந்த சூழலில் அவரது உடலை சாலை ஓரத்திலேயே எரியூட்ட வாகனத்தில் எடுத்து வந்த பொதுமக்கள் தங்களுக்கு மயான வசதி செய்து கொடுக்க கோரி வாகனத்திலிருந்து உடலை இறக்கி வைக்காமல் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து விரைந்து வந்த செக்காணூரணி காவல் நிலைய காவல் ஆய்வாளர் சங்கரேஸ்வரி தலைமையிலான போலிசார் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் புறம்போக்கு நிலங்களை அளவீடு செய்து மயான வசதியை செய்து தருவதாக உறுதி அளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

Edited By: Sugapriya Prakash