1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 18 அக்டோபர் 2024 (15:46 IST)

வயநாடு இடைத்தேர்தல்: பிரியங்கா காந்தியை எதிர்த்து குஷ்பு போட்டி?

ராகுல் காந்தி வெற்றி பெற்று, ராஜினாமா செய்த வயநாடு தொகுதியில் இடைத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், அந்த தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிடப் போவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அதே தொகுதியில் பிரியங்கா காந்தியை எதிர்த்து நடிகை குஷ்பூ போட்டியிடப் போவதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கேரள மாநில வயநாடு தொகுதியில் சமீபத்தில் நடந்த மக்களவைத் தேர்தலில் ராகுல் காந்தி போட்டியிட்டு வெற்றி பெற்றார்; ஆனால் அவர் இன்னொரு தொகுதியிலும் வெற்றி பெற்றதால், வயநாடு தொகுதி எம்பி பதவியை ராஜினாமா செய்தார்.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சி சார்பில் பிரியங்கா காந்தி வயநாடு தொகுதியில் களம் இறங்க உள்ள நிலையில், அவரை எதிர்த்து பாஜக சார்பில் நடிகை குஷ்புவை களம் இறக்க திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. பாஜக உத்தேச வேட்பாளர் பட்டியலில் குஷ்பு பெயர் இடம் பெற்றுள்ளதாக மலையாள ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.

இது குறித்து குஷ்பூ கூறிய போது, தேர்தல் வந்தாலே இது போன்ற வதந்திகள் பரவி வருகின்றன. எல்லா தேர்தலிலும் சில வதந்திகள் எழுந்து வருகின்றன. அதுபோல,  பாஜக சார்பில் நான் போட்டியிடப் போவதாக பேசப்படுவது ஒரு வதந்தி தான். வயநாடு தொகுதியில் போட்டியிடுவது குறித்து என்னிடம் மேலிடம் இதுவரை பேசவில்லை; ஆனால், அதே நேரத்தில் கட்சி மேலிடம் எனக்கு வாய்ப்பு கொடுத்தால், அந்த வாய்ப்பை 100% பயன்படுத்திக் கொள்வேன் என்று தெரிவித்தார்.


Edited by Siva