வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 14 மார்ச் 2024 (13:40 IST)

பிரதமர் மோடி நாளை வருகை..! குமரியில் போக்குவரத்து மாற்றம்..!!

Modi
பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு கன்னியாகுமரியில் ஒரு சில இடங்களில் நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
 
மக்களவைத் தேர்தலில் பாஜக மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவு திரட்டும் வகையில் பிரதமர் மோடி நாளை கன்னியாகுமரி வருகிறார். அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி வளாகத்தில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் அவர் பங்கேற்று பேசுகிறார். நாளை காலை 11 மணியளவில் திருவனந்தபுரம் வழியாக கன்னியாகுமரி வரும் பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க பாஜகவினர் ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.
 
கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தீவிர வாகன சோதனை நடைபெற்று வருகிறது. ஆரோக்கிய புரம் முதல் நீரோடி வரை கடற்கரை பகுதிகளில் மெரைன் போலீஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தங்கும் விடுதிகள், ஓட்டல்களுக்கு வரும் வெளியூர் நபர்கள் குறித்த விவரங்களை உடனுக்குடன் தெரிவிக்க போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

டெல்லியில் இருந்து வந்துள்ள பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகள் கன்னியாகுமரி, அகஸ்தீஸ்வரம் மற்றும் சுற்றுப் புற பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்து வருகின்றனர்
 
இந்நிலையில் கன்னியாகுமரிக்கு பிரதமர் நரேந்திர மோடி வருகையை ஒட்டி நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  நாளை காலை 6 மணி முதல் பொதுக்கூட்டம் முடியும் வரை குமரி ரவுண்டானாவில் இருந்து மகாதானபுரம் ரவுண்டானா வரை செல்ல போக்குவரத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


மேலும் பொதுக்கூட்டத்துக்கு வருகை தரும் வாகனங்கள் சரவணந்தேரி வரை அனுமதிக்கப்படுவார்கள் என்றும் காவல்துறை அறிவித்துள்ளது.