செல்போன் உற்பத்தியில் இந்தியா 2வது இடம்..! பிரதமர் மோடி பெருமிதம்..!!
உலக அளவில் செல்போன் உற்பத்தியில் இந்தியா 2வது இடத்தில் உள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
குஜராத்தில் இரண்டு மற்றும் அசாமில் ஒன்று உட்பட சுமார் ரூ.1.25 லட்சம் கோடி மதிப்பில் 3 செமி கண்டெக்டர் ஆலைகளுக்கு வீடியோ கான்பரன்சிங் மூலம் இன்று பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
பின்னர் பேசிய பிரதமர் மோடி, உலக அளவில் செல்போன் உற்பத்தியில் இந்தியா 2வது இடத்தில் உள்ளதாக தெரிவித்தார். இந்தியா ஏ.ஐ., தொழில் நுட்பத்தை விரிவுப்படுத்தி வருகிறது என்று அவர் கூறினார்.
3 செமிகண்டெக்டர் ஆலைகள் மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என்றும் தயாரிப்பு மையமாக இந்தியா உருவெடுக்கும் என்றும் பிரதமர் கூறினார்.
பல்வேறு காரணங்களால், முதல் மற்றும் இரண்டாவது தொழில் புரட்சியின் போது இந்தியா பின்தங்கியது என்றும் தற்போது இந்தியா முன்னோடியாக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
பிரகாசமான எதிர்காலத்தை நோக்கி ஒரு படி முன்னேறி வருகிறோம் என தெரிவித்த பிரதமர், இந்தியா ஏற்கனவே விண்வெளி, அணுசக்தி மற்றும் டிஜிட்டல் துறையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்று கூறினார். செமிகண்டெக்டர் துறையில் இந்தியாவும் உலக வல்லரசாக மாறும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.