புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 13 மார்ச் 2019 (08:52 IST)

பிரேமலதா vs சுதீஷ் – யாருக்கு கிடைக்கும் கள்ளக்குறிச்சி ?

அதிமுக அணியில் இணைந்துள்ள தேமுதிகவிற்கு ஒதுக்கப்பட்ட 4 தொகுதிகளில் கள்ளக்குறிச்சி தொகுதியில் நிற்பதற்கு அக்கட்சிக்குள்ளாக பலத்த போட்டி நிலவி வருகிறது.

ஒரே நேரத்தில் அதிமுக மற்றும் திமுக ஆகிய இரண்டுக் கட்சிகளோடும் தேமுதிக கூட்டணிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதால் அவர்களின் ஒட்டுமொத்த பிம்பமும் டேமேஜ் ஆனது. இதுகுறித்த திமுக பொருளாளர் துரைமுருகன் மற்றும் தேமுதிக துணை செயலாளர் சுதீஷ் ஆகியோரின் குற்றச்சாட்டுகள் நேற்று முழுவதும் தமிழக அரசியலில் பரபரப்பைக் கிளப்பின. அதன் பின்னான பத்திரிக்கையாளர் சந்திப்பில் பிரேமலதாவின் சர்ச்சைக்குரிய பேச்சு தேமுதிக மீதான மரியாதையைக் குறைத்திருக்கிறது.

கடைசியில் ஒருவழியாக அதிமுக ஒதுக்கிய 4 தொகுதிகளைப் பெற்றுக்கொண்டு அந்தக் கூட்டணியில் அங்கம் வகிக்கிறது தேமுதிக. இந்நிலையில் ஒதுக்கப்பட்டுள்ள 4 தொகுதிகளில் கள்ளக்குறிச்சி தொகுதியும் ஒன்று எனத் தெரிகிறது. அந்த தொகுதியில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஏற்கனவே தேமுதிகவின் சுதீஷ் போட்டியிட்டு தோல்வியடைந்துள்ளார். அதனாக் மீண்டும் அதே தொகுதியில் நிற்க அவர் ஆசைப்படுகிறார். ஆனால் எதிரணியில் இருந்து பொன்முடியின் மகன் கௌதம் சிகாமணி நிற்க இருப்பதாலும் அவருக்காக பொன்முடி ஆதரவாளர்கள் தீவிரமாகக் களத்தில் இறங்கி வேலை செய்வதாலும் போட்டிக் கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதனால் வெற்றிப் பெற வேண்டுமானால் பிரேமலதாவே அந்தத் தொகுதியில் நிற்கவேண்டுமென ரிப்போர்ட் பிரேமலதாவிற்குப் போயுள்ளது. இதனால் கள்ளக்குறிச்சி தொகுதியில் பிரேமலதா களமிறங்க அதிக வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.