வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 1 அக்டோபர் 2019 (15:07 IST)

கடற்கரையில் மீண்டும் சிவாஜி சிலையை வைக்கவேண்டும் – பிரபு கோரிக்கை !

மெரினாக் கடற்கரையில் இருந்து அகற்றப்பட்ட சிவாஜி சிலையை மீண்டும் அங்கேயே நிறுவ வேண்டும் என சிவாஜியின் மகன் பிரபு தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு திமுக ஆட்சியில் சென்னை மெரீனாவில் வெண்கல சிலை வைக்கப்பட்டது. இந்த சிலையை அப்போதைய முதல்வரும் சிவாஜியும் நெருங்கிய நண்பருமான மு.கருணாநிதி திறந்து வைத்தார். ஆனால் இந்த சிலை போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டதை அடுத்து அடையாறில் உள்ள சிவாஜி மணிமண்டபத்திற்கு மாற்றப்பட்டது. இதனால் சிவாஜி குடும்பத்தினர்களும் ரசிகர்களும் அதிருப்தி அடைந்தனர்.

இந்த நிலையில் இன்று சிவாஜி கணேசனின் 91 ஆவது பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. இதில் தமிழக அரசு சார்பில் அமைச்சர் ஜெயக்குமார், கடம்பூர் ராஜூ உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். சிவாஜி குடும்பத்தினர் சார்பாக சிவாஜி மகன் ராம்குமார், நடிகர் பிரபு மற்றும் பேரன் விக்ரம் பிரபு ஆகியோர் மாலையிட்டு மரியாதை செலுத்தினர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பிரபு ‘தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் வந்து மரியாதை செலுத்துவது சந்தோஷமாக இருக்கிறது. மெரினாக் கடற்கரையில் மீண்டும் அந்த சிலையை வைக்க சொல்லி கோரிக்கை வைத்திருக்கிறோம். விரைவில் வைப்பார்கள் என நம்புகிறோம்’ எனக் கூறியுள்ளார்.