ஞாயிறு, 6 அக்டோபர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 8 ஜூலை 2024 (17:51 IST)

அமைச்சர் பொன்முடி வழக்கில் மேலும் ஒருவர் பிறழ் சாட்சியம்.. இதுவரை 27 சாட்சிகள் பல்டி..!

Ponmudi
அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கில் மேலும் ஒருவர் பிறழ் சாட்சியம் சொல்லியதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், முன்னாள் கிராம உதவியாளர் மணி என்பவர் பிறழ் சாட்சியமானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
சம்பவத்தன்று அரசு அதிகாரிகளின் அறிவுரைப்படி சோதனை நடத்த சென்றதாக கூறிய முன்னாள் கிராம உதவியாளர் மணி, சோதனை முடித்த பின்னர் அதிகாரிகளின் வற்புறுத்தல் பேரில் கோப்புகளில் கையெழுத்திட்டேன் என்றும், மற்ற விவரங்கள் ஏதும் தனக்கு தெரியாது என பிறழ் சாட்சியம் அளித்துள்ளார்.
 
அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கில் இதுவரை 34 பேர் அரசு தரப்பு சாட்சியமாக சாட்சியம் அளித்துள்ள நிலையில், அதில் 27 பேர் பிறழ் சாட்சியம் அளித்துள்ளனர் என்பதால் இந்த வழக்கின் போக்கே மாறும் நிலை இருப்பதாக கூறப்படுகிறது.
 
அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கு இன்று நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்த போது அமைச்சரின் மகன் பொன் கௌதம சிகாமணி உள்பட 6 பேர் ஆஜராகினர். அமைச்சர் பொன்முடி ஏன் ஆஜராகவில்லை என்பதற்கான விளக்கத்தை திமுக வக்கீல்கள் நீதிமன்றத்தில் மனுவாக தாக்கல் செய்தனர்.
 
இன்றையவிசாரணையில் சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை முடிந்த பின்னர் இந்த வழக்கை மீண்டும் நாளைக்கு நீதிபதி ஒத்தி வைத்து உத்தரவிட்டார். அமைச்சர் பொன்முடி வழக்கில் அடுத்தடுத்து அரசு தரப்பு சாட்சிகள் பிறழ் சாட்சியம் செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்துகிறது. 
 
Edited by Mahendran