திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 10 ஆகஸ்ட் 2018 (11:41 IST)

டிவிஎஸ் சீனிவாசனை குறி வைக்கும் பொன். மாணிக்கவேல் - பரபர தகவல்கள்

இந்தியாவில் உள்ள முக்கிய கோடீஸ்வரர்களில் ஒருவரான டி.வி.எஸ். சீனிவாசனின் பெயர் சிலை கடத்தல் வழக்கில் அடிபடும் விவகாரம் நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
தமிழகத்தில் உள்ள முக்கிய கோவில்களில் இருந்த சிலைகள் கடத்தப்பட்ட வழக்கை ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தலைமையிலான குழு விசாரித்து வருகிறது. குஜராத் உள்ளிட்ட சில மாநிலங்களிலிருந்து சில முக்கிய சிலைகளை அவர்கள் மீட்டு வந்துள்ளனர்.
 
இந்நிலையில், பொன்.மாணிக்கவேல் தலைமையிலான குழு பாரம்பரியமிக்க டி.வி.எஸ் குழுமங்களின் தலைவரான வேணு சீனிவாசன் பக்கம் பார்வையை திருப்பியுள்ளது. சென்னை கபாலீஸ்வரை கோவில் வரலாற்று சிறப்பு மிக்க மிகவும் பழமையான கோவில் ஆகும். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு செய்யப்பட்ட பல சிலைகள் இந்த கோவிலில் இருக்கிறது.
 
குறிப்பாக பார்வதி மயிலாக வந்து சிவனுக்கு பூஜை செய்யும் வகையில் அமைக்கப்பட்ட சிலை மூலவர் சிலைக்கு அருகே வைக்கப்பட்டிருந்தது. இந்த சிலை மாற்றப்பட்டதை கவனித்த ஒரு பக்தர் அதிகாரிகளிடம் புகார் அளித்தார். அதில், பலனில்லை என்பதால் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதிலும் எந்த முன்னேற்றம் ஏற்படாத நிலையில்தான் பொன்.மாணிக்கவேல் இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ளார்.

 
சில ஆண்டுகளுக்கு முன்பு கபாலீஸ்வர கோவிலில் கும்பாபிகேஷம் நடந்தது. அதன் பின்னரே சிலை மாற்றப்பட்டதை அவர் கண்டுபிடித்தார். அறங்காவலர் குழு தலைவராக இருந்து கும்பாபிகேஷத்தை நடத்தி கொடுத்தவர்தான் டி.வி.எஸ் வேணு சீனிவாசன். எனவே, அவர் மீது பொன். மாணிக்கவேலுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. மேலும், சீனிவாசன் அறங்காவலர் குழு தலைவராக இருந்து கும்பாபிகேஷம் நடந்த ஸ்ரீரங்கம் உள்ளிட்ட இரு கோவில்களில் இரு சிலைகள் மாற்றப்பட்டதாக ஏற்கனவே புகார் உள்ளது.
 
எனவே, எந்த நேரத்திலும் சீனிவாசனை பொன்.மாணிக்கவேல் கைது செய்யும் சூழ்நிலை நிலவியது. இந்நிலையில்தான், முன்ஜாமீன் கேட்டு சீனிவாசன் நீதிமன்றத்தை நாடினார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவரை கைது செய்ய 6 வார கால இடைக்கால தடையை விதித்துள்ளது. இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.