1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : சனி, 20 ஜூலை 2024 (15:39 IST)

ஆம்ஸ்ட்ராங் கொலையின் பின்னணியில் அரசியல்வாதிகள் ராஜாங்கம்.! நாராயணன் திருப்பதி...

Narayana Thirupati
ஆம்ஸ்ட்ராங் கொலையின் மூலம் சென்னையில் அரசியல்வாதிகள் பின்னணியில்  ராஜாங்கம் நடைபெற்றுக் கொண்டிருந்தது வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளது என பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.  
 
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு பின் நடைபெறும் சம்பவங்கள், காவல் துறையின் நடவடிக்கைகள்,  கைதுகள், அதனை தொடர்ந்து வரும் செய்திகள் அனைத்தும், இத்தனை காலம் சென்னை மாநகரம் ரவுடிகளின் ராஜ்யத்தில் எவ்வாறு இருந்து வந்தது என்பதை  தெளிவாக்குகிறது.

அரசியல் போர்வையில், அரசியல்வாதிகளின் பின்னணியில் இந்த ராஜாங்கம் நடைபெற்றுக் கொண்டிருந்தது வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கட்டப்பஞ்சாயத்து,  நில அபகரிப்பு, மோசடி,  ஆள் கடத்தல்,  போதை பொருட்கள்,  கந்து வட்டி,  மீட்டர் வட்டி என அனைத்து விதமான சட்ட விரோத செயல்களும் சமூக விரோதிகளால், அர‌சிய‌ல் கட்சிகளின் பாதுகாப்போடு செயல்படுத்தப்பட்டு வருவது சர்வ சாதாரணமாகி விட்டது.

அரசியலை கேடயமாக பயன்படுத்தி சமூக விரோத தீய சக்திகள் குளிர் காய்ந்து கொண்டிருக்கின்றன. சில அரசியல் தலைவர்களின்(?) பகட்டுக்காக , விளம்பரத்திற்காக, புகழுக்காக வைக்கப்படும் கட்- அவுட்டுகள், பேனர்கள்,  பத்திரிகை விளம்பரங்கள் ஆகியவற்றுக்கான ஆடம்பர அரசியல் செலவுகளை உழைத்து சம்பாதிக்கும் எந்த ஒரு நிர்வாகியாலும், தொண்டனாலும் ஏற்க முடியாத சூழ்நிலையை,  சட்ட விரோதமாக பணமீட்டும் தீய சக்திகள் தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்கின்றன.

அவர்களை ஊக்குவிப்பது அரசியல்வாதிகள் தான். எங்கும் அரசியல்,  எதிலும் அரசியல் எனும் நிலையில் அரசியல் அதிகாரத்தில் இருப்பவர்களின் ஆணைக்கு அடிபணியாமல் காவல்துறை செயல்பட முடியாது என்பது மறைக்க, மறுக்க முடியாத உண்மை. கட்டப்பட்ட காவல்துறை அதிகாரிகளின் கைகள், குற்றவாளிகளின் கைகளில் விலங்கு மாட்ட முடியாததில் வியப்பேதும் இல்லை.  இந்நிலை மாற வேண்டும்.  இது அர‌சிய‌ல் மாற்றத்தால் நிகழாது. 

ஒரு நாளில் இம் மாற்றம் நிகழ வாய்ப்பில்லை.  ஒருவரால் மட்டும் மாற்றம் நிகழ்ந்து விடாது. தேவை சமூக மாற்றம். இம் மாற்றத்திற்கு பெரும் விலையை கொடுக்க வேண்டி வரும். கொடுக்க வேண்டும்.  இல்லையேல்,  அடுத்த தலைமுறை வன்முறையின் கோரப்பிடியில், சமூக சீர்கேட்டின் அவலத்தில் சிக்கித் தவிக்கும். ரவுடிகள், சமூக  விரோதிகள், குற்றவாளிகள், குற்றப்பின்னணி கொண்டவர்கள்,  மோசடிப் பேர்வழிகள், என ஒரு பெரும்  பட்டியலை சேர்ந்தவர்கள் அரசியல் கட்சிகளின் உச்சாணிக் கொம்பில் அமர்ந்திருக்கிறார்கள்.


அவர்களை அகற்றுவது எளிதல்ல என்றாலும், நேர்மையானவர்கள் முயன்றால் முடியக் கூடியதே முயற்சி திருவினையாக்கும் என நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.