1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : சனி, 6 ஜூலை 2024 (16:08 IST)

ஆம்ஸ்ட்ராங் கொலை பின்னணியில் அரசியல் காரணமா? காவல் ஆணையர் விளக்கம்..!!

Comisioner
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை பின்னணியில் அரசியல் காரணங்கள் எதுவும் இல்லை என சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் விளக்கம் அளித்துள்ளார்.
 
ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆம்ஸ்ட்ராங் உயிருக்கு ஆபத்து இருந்ததாக போலீசாருக்கு எந்தத் தகவலும் வரவில்லை என்றார். ஒரு தேசியக் கட்சியின் மாநிலத் தலைவர் என்ற அடிப்படையில் உளவுத்துறையினர் அவரது நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர் என்று அவர் தெரிவித்தார்.
 
தேர்தல் நடத்தை விதி காரணமாக போலீசாரிடம் ஒப்படைத்த துப்பாக்கியை ஜூன் 13ம் தேதியே ஆம்ஸ்ட்ராங் திரும்ப பெற்றுவிட்டதாகவும்,  ஆம்ஸ்ட்ராங் மீது 7 வழக்குகள் இருந்ததாகவும், அந்த அனைத்து வழக்குகளில் இருந்தும் அவர் விடுவிக்கப்பட்டதாகவும் காவல் ஆணையர் குறிப்பிட்டார்.
 
அடையாளம் தெரியாத சிலர் ஆம்ஸ்ட்ராங் மீது கத்தியால் தாக்குதல் நடத்தியதாக தெரிவித்த அவர்,  தற்போது வரை விசாரணை நடத்தியதில் ஆம்ஸ்ட்ராங் கொலை பின்னணியில் அரசியல் காரணங்கள் எதுவும் இல்லை என்று விளக்கம் அளித்தார். முழுமையான விசாரணைக்குப் பிறகே கொலைக்கான காரணம் தெரிய வரும் என்றும் கொலை நடந்த 3 மணி நேரத்துக்குள் 8 பேரை கைது செய்துள்ளதாகவும் காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் கூறினார்.

ஆம்ஸ்ட்ராங் கொலை குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தர அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும்  வழக்கில் தொடர்புடைய பிற குற்றவாளிகளை கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

 
ஆம்ஸ்ட்ராங் இறுதிச் சடங்கு முடியும் வரை தேவையான இடங்களில் பாதுகாப்பு வழங்கப்படும் என்று சென்னை காவல் ஆணையர் கூறினார்.