திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : சனி, 6 ஜூலை 2024 (15:23 IST)

UG நீட் தேர்வு மீண்டும் நடத்தப்பட வேண்டும்..! காங்கிரஸ் வலியுறுத்தல்..!!

karga
இளநிலை நீட் தேர்வு மீண்டும் நடத்தப்பட வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தியுள்ளார்.
 
இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், NEET-UG தேர்வில் வினாத்தாள்கள் எதுவும் கசியவில்லை என்று மோடி அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். லட்சக்கணக்கான இளைஞர்களை நம்ப வைக்கும் நோக்கில், அப்பட்டமான இந்த பொய் சொல்லப்படுகிறது என்றும் அரசின் இந்த முயற்சியால் அவர்களின் எதிர்காலம் பாழாகி வருகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
ஒரு சில இடங்களில் மட்டுமே முறைகேடுகள், மோசடிகள் நடந்துள்ளன" என்று மத்திய கல்வி அமைச்சகம் கூறியிருப்பது தவறானது என்று குறிப்பிட்டுள்ள மல்லிகார்ஜுன கார்கே, பாஜக-ஆர்எஸ்எஸ் கல்வி மாஃபியாவை ஊக்குவித்து ஒட்டுமொத்த கல்விமுறையையும் கையகப்படுத்தியுள்ளது என்று விமர்சித்துள்ளார்
 
தேர்வுகளில் வினாத்தாள்களை கசியவிடுவதன் மூலமும் மோடி அரசு, நமது கல்வி முறையை அழிக்க குறியாக உள்ளது என்றும் NEET-UG மீண்டும் நடத்தப்பட வேண்டும் என்றும் வெளிப்படையான முறையில் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
 
வினாத்தாள் கசிவு முறைகேடுகள் அனைத்தும் உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையில் முழுமையாக விசாரிக்கப்பட்டு, குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் மோடி அரசு தனது தவறுகளில் இருந்து விடுபட முடியாது என்றும் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

 
காங்கிரஸ் கண்டனம்:
 
மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டிருப்பதற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. ஒட்டுமொத்த நீட் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைமுறையே நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதாக காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.