வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 24 நவம்பர் 2019 (15:42 IST)

ஆசிரியர் டார்ச்சரால் மாணவி தற்கொலை! – போலீஸ் வலைவீச்சு!

தூத்துக்குடியில் ஆசிரியரின் கொடுமை தாங்க முடியாமல் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி அருகே ஆரோக்கியபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தவர் மாணவி மரிய ஐஸ்வர்யா. பள்ளியில் படிப்பில் சிறந்து விளங்குபவராக இருந்துள்ளார் ஐஸ்வார்யா.

இவர் இரண்டு தினங்களுக்கு முன்னர் உறவினர் ஒருவர் இறந்ததால் பள்ளிக்கு விடுப்பு எடுத்துள்ளார். அதற்கு பிறகு அவர் பள்ளி சென்றும் ஆசிரியர் ஞானபிரகாசம் என்பவர் தொடர்ந்து ஐஸ்வார்யாவை கொடுமைப்படுத்தியுள்ளார்.

முறையாக விடுப்பு சொல்லாமல் சென்றதற்காக 150 தோப்பு கரணம் போட சொல்லியிருக்கிறார். வகுப்பு முடியும் வரை தோப்புக்கரணம் போட்ட ஐஸ்வர்யா அங்கேயே மயங்கி விழுந்துள்ளார். அவரை அவரது தோழிகள் உதவி செய்து அழைத்து சென்றிருக்கின்றனர். பருவத்தேர்வில் வகுப்பிலேயே இரண்டாவதாக வந்த ஐஸ்வர்யாவை பக்கத்தில் இருந்த பெண்ணை பார்த்து காப்பியடித்ததாகவெளியில் நிறுத்தி வைத்திருக்கிறார் ஞானபிரகாசம்.

இந்நிலையில் நேற்று ஞானபிரகாசம் சிறப்பு வகுப்புகள் நடத்தியிருக்கிறார். ஆசிரியரின் தொல்லைக்கு பயந்து பள்ளிக்கு செல்ல பயந்த மாணவி வீட்டிலேயே தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. மேற்படி விவகாரம் தெரிந்து ஆத்திரமடைந்த ஐஸ்வர்யாவின் உறவினர்கள் போலீஸில் புகார் அளித்துள்ளனர்.

போலீஸ் வருவது தெரிந்து முன்னரே ஞானப்பிரகாசத்தை தலைமை ஆசிரியர் தப்பிக்க விட்டது விசாரணையில் தெரியவர, தலைமை ஆசிரியரை கைது செய்துள்ளனர் போலீஸ். மேலும் தப்பியோடிய ஆசிரியர் ஞானபிரகாசத்தை போலீஸார் தேடி வருகின்றனர்.