1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: புதன், 15 நவம்பர் 2017 (15:08 IST)

ரெய்டில் சசிகலா குடும்பத்திடம் சிக்கிய சொத்துகளின் மதிப்பு எவ்வளவு?

ரெய்டில் சசிகலா குடும்பத்திடம் சிக்கிய சொத்துகளின் மதிப்பு எவ்வளவு?

இந்தியாவின் மிகப்பெரிய வருமான வரித்துறை சோதனையை சசிகலா குடும்பத்தை குறிவைத்து வருமான வரித்துறை நடத்தி முடித்துள்ளது. கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கை என இது கூறப்பட்டாலும், இந்த சோதனை அரசியல் உள் நோக்கம் கொண்டது என்றே பல அரசியல் தலைவர்கள் கூறுகின்றனர்.


 
 
இந்த சோதனையில் கைப்பற்றப்பட்டவை குறித்து வருமான வரித்துறை இதுவரை அறிக்கை வெளியிடவில்லை. பொதுவாக வருமான வரித்துறை சோதனை நடந்தால் அதுகுறித்து அறிக்கை வருவது வழக்கம். ஆனால் வருமான வரித்துறை மௌனமாக இருப்பது இது அரசியல் உள்நோக்கம் கொண்டதா என்பதை சிந்திக்க வைக்கிறது.
 
இந்நிலையில் இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் சசிகலா குடும்பத்தில் நடத்திய சோதனையில் கைப்பற்றப்பட்டவை குறித்து வருமான வரித்துறை அறிக்கை வெளியிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
 
பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை:-
 
இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் மிகப்பெரிய அளவிலான வருமானவரி சோதனை சசிகலா குடும்ப நிறுவனங்களில் நடத்தி முடிக்கப்பட்டிருக்கிறது. அதன் நோக்கம் மற்றும் கண்டுபிடிப்பு குறித்து முரண்பட்ட தகவல்கள் வெளியாகும் நிலையில் அதுபற்றி விளக்கமளிக்கப்படாதது குழப்பங்களை அதிகரித்துள்ளது.
 
சசிகலா குடும்பத்திற்கு நேரடியாகவும், பினாமிகள் வழியாகவும் சொந்தமான நிறுவனங்கள், அலுவலகங்கள், வீடுகள் என 187 இடங்களில் கடந்த 9-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டது. இச்சோதனையின் போது கண்டுபிடிக்கப்பட்ட ஆவணங்கள் மூட்டை மூட்டையாக வருமானவரி அலுவலகங்களுக்கு கொண்டு செல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ரூ.7 லட்சம் ரொக்கம், ரூ.5 கோடிக்கும் அதிக மதிப்புள்ள நகைகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும், ரூ.1430 கோடி வருமானத்திற்கு வரி ஏய்ப்பு செய்யப்பட்டிருப்பதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இவை தவிர 15 வங்கி லாக்கர்களை உடைத்து சோதனை செய்யப்பட வேண்டியிருப்பதாகவும், அதன்பிறகே சோதனையில் சிக்கிய சொத்துக்களின் முழுமையான விவரங்கள் தெரியவரும் என்றும் கூறப்படுகிறது.
 
வருமானவரி சோதனை தொடர்பாக வெளியாகியுள்ள செய்திகள் எந்த அளவுக்கு உண்மையானவை என்பது தெரியவில்லை. வழக்கமாக ஓரிடத்தில் வருமானவரி சோதனைகள் நடத்தி முடிக்கப்பட்ட பிறகு அங்கு என்னென்ன பொருட்கள் கைப்பற்றப்பட்டன, அவற்றின் மதிப்பு எவ்வளவு? சோதனையின் தொடர் நடவடிக்கையாக மேற்கொள்ளப்படவிருப்பவை என்னென்ன? என்பது குறித்த விவரங்களை வருமானவரித் துறை வெளியிடும். ஆனால், ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு முன்னாள் தலைமைச் செயலாளர் இராமமோகன்ராவ், மணல் கொள்ளையன் சேகர்ரெட்டி, அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோரின் வீடுகளில் நடத்தப்பட்ட வருமானவரி சோதனைகளில் கிடைத்தவற்றின் விவரங்கள் இன்று வரை வெளியிடப்படவில்லை. சம்பந்தப்பட்டவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சேகர்ரெட்டி மீதான வழக்கு முடிவுக்கு வரப்போகிறது. இராமமோகன்ராவ் எந்த சிக்கலும் இல்லாமல் பணி ஓய்வு பெற்று விட்டார். விஜயபாஸ்கர் அமைச்சர் பதவியில் தொடருவதுடன், முன்பை விட அதிக வேகத்தில் ஊழல் வேட்டையாடி வருகிறார்.
 
சேகர்ரெட்டி முதல் விஜயபாஸ்கர் வரை ஒவ்வொருவர் வீட்டிலும் வருமானவரி சோதனை நடத்தப்பட்டதன் நோக்கம் வேறு என்றும், அது நிறைவேறி விட்டதால் தான் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர், பினாமிகளின் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனைகளும் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்ற குற்றச்சாற்று எழுந்துள்ள நிலையில், இந்த சோதனையும் முந்தைய சோதனைகளைப் போல பரபரப்பை ஏற்படுத்தி, இறுதியில் புஸ்வாணமாகிவிடக்கூடாது.
 
ஏற்கனவே கூறியதைப் போல சசிகலாவும், அவரது குடும்பத்தினரும் முறைகேடான வழிகளில் தமிழகத்தை சுரண்டி பல லட்சம் கோடி மதிப்புள்ள சொத்துக்களை குவித்து வைத்திருப்பதை தமிழக மக்கள் அறிவார்கள். கடந்த 27 ஆண்டுகளாக அவர்கள் சொத்துக்களை குவித்து வரும் நிலையில், ஒருமுறை சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்ந்ததைத் தவிர, மற்ற நேரங்களில் அதை மத்திய, மாநில அரசுகள் வேடிக்கை தான் பார்க்கின்றன. உலகம் முழுவதும் சொத்துக்களை வாங்கிக்குவித்தது போக, கண்டெய்னர்களை பணத்தை அள்ளிச் செல்லும் அளவுக்கு சசிகலாவும், அவரது குடும்பத்தினரும் பணத்தை குவித்து வைத்துள்ளனர் என்பதிலிருந்தே தமிழகத்தை அவர்கள் எந்த அளவுக்கு சுரண்டியிருப்பார்கள் என்பதை உணர முடியும்.
 
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அதிமுகவாக இருந்தாலும், திமுகவாக இருந்தாலும் 5 ஆண்டுகள் தமிழக மக்களை கொள்ளையடித்து, அதில் ஒரு பகுதியை தேர்தலின் போது ஓட்டுக்கு விலையாகக் கொடுத்து மீண்டும் ஆட்சிக்கு வருவதைத் தான் வாடிக்கையாகக் கொண்டிருக்கின்றன. அதிமுக ஆட்சிக்காலத்தில் கொள்ளையடிக்கப்பட்ட மக்களின் வரிப்பணத்தில் பெரும்பகுதி இப்போது சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், அதை மீட்டு மக்களிடம் ஒப்படைப்பது தான் மத்திய அரசின் நோக்கமாக இருக்க வேண்டும்.
 
மாறாக, சசிகலா தரப்பிடமிருந்து தங்களின் அரசியல் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான கருவியாக இந்த சோதனையை பயன்படுத்திக் கொண்டு, எதிர்பார்ப்புகள் நிறைவேறிய பின்னர் அவர்களை தப்பிக்க விட்டால் அதை தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள். சசிகலா குடும்பத்தினரை தப்பிக்க விடாமல், அவர்களுக்கு சட்டப்படி கிடைக்க வேண்டிய தண்டனையை வருமானவரித்துறை பெற்றுத்தர வேண்டும் என்பது தான் மக்களின் விருப்பமாகும். இதை அரசும், வருமானவரித்துறையும் உணர வேண்டும்.
 
மக்களின் விருப்பம் நிறைவேறுவதை உறுதி செய்யும் வகையில், சசிகலா குழுவினரிடம் நடத்தப்பட்ட வருமானவரி ஆய்வில் கிடைத்த பணம், நகைகள், சொத்து ஆவணங்கள் உள்ளிட்டவற்றின் விவரங்களை வருமானவரித்துறை உடனடியாக வெளியிட வேண்டும். இந்த விஷயத்தில் அடுத்து மேற்கொள்ளப்பட உள்ள நடவடிக்கைகள் குறித்த விவரங்களையும் வருமானவரித்துறை அறிவிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
 
அதுமட்டுமின்றி, இதை வரி ஏய்ப்பாக மட்டும் பார்க்காமல் ஊழல் குற்றமாகவும், கூட்டுசதியாகவும் கருதி வழக்குப் பதிவு செய்ய வேண்டும். அந்த வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைப்பதுடன், அதற்கு மைக்கேல் டி குன்ஹா போன்ற நேர்மையான நீதிபதி ஒருவரை சிறப்பு நீதிபதியாக நியமிக்க வேண்டும். என கூறியுள்ளார் மருத்துவர் ராமதாஸ்.