மீண்டும் 2 நாட்களுக்கு மழை - வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்னும் 2 நாட்களுக்கு மிதமான பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கியது முதல் தமிழகம் முழுவதும் இரண்டு வாரங்களுக்கு மழை வெளுத்து வாங்கியது. சென்னையில் பெய்த கனமழையால் மழைநீர் வெள்ளம் போல் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கையை பெரிதும் பாதித்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் வங்கக்கடலில் புதிதாக காற்றழுத்த தாழ்வு உருவாகியுள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் கூறியதாவது:-
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வெகு தொலைவில் உள்ளதால் தமிழகத்தில் பெரிதாக மழை பெய்ய வாய்ப்பில்லை. இதனால் தமிழகத்துக்கு பாதிப்பு இல்லை.சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று கூறியுள்ளார்.
மேலும் தமிழகத்தில் அதிகபட்சமாக தஞ்சாவூரில் 7 செ.மீ மழை பெய்துள்ளது என்றும் தெரிவித்தார். கடந்த இரண்டு நாட்களாக லேசான சாரல் மழை மட்டுமே பெய்து வந்த நிலையில் இன்று சென்னையில் வானம் தெளிவாகி வெயில் எட்டி பார்த்துள்ளது.