வன்னியர் இடஒதுக்கீட்டிற்கு தமிழக அரசு முறையிட வேண்டும்! – பாமக வழக்கறிஞர்!
தமிழகத்தில் வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதற்கு தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டுமென பாமக வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
கடந்த அதிமுக ஆட்சியின்போது வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10.5% இடஒதுக்கீடு வழங்கும் மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் இதற்கு எதிராக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தொடரப்பட்ட வழக்கில், இந்த இடஒதுக்கீடு நடைமுறைகளுக்கு எதிரானது என கூறி நீதிமன்றம் இடஒதுக்கீட்டை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து பேசியுள்ள பாமக வழக்கறிஞர் பாலு “வன்னியர் உள் ஒதுக்கீட்டு சட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும். தமிழக அரசு வழக்கை மேல்முறையீடு செய்யும் என முழுமையாக நம்புகிறோம். மேல்முறையீட்டில் பாமக தன்னையும் ஒரு தரப்பாக இணைத்துக் கொள்ளும்” எனத் தெரிவித்துள்ளார்.