செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Updated : வெள்ளி, 17 ஏப்ரல் 2020 (08:48 IST)

அடங்காத மது விரும்பிகள்; தொடரும் உயிர்பலிகள்! பெரம்பலூரில் சோகம்!

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மது விரும்பிகள் தொடர்ந்து ஏதேதோ மருந்துகளை குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவது அதிகரித்துள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழகத்திலும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் அனைத்து டாஸ்மாக் மற்றும் தனியார் மதுக்கடைகளும் மூடப்பட்டுள்ளன. இதனால் மது அருந்த முடியாமல் தவிக்கும் பலர் கள்ளச்சாரயத்தை நாடுகின்றனர். மேலும் பலர் ஆல்கஹால் உள்ள திரவங்கள் சிலவற்றை குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் சம்பவங்களும் தொடர்ந்து வருகின்றன.

இந்நிலையில் பெரம்பலூரில் மது கிடைக்காததால் அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் மருந்து ஒன்றை தண்ணீரில் கலந்து குடித்த மூன்று பேர் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து, உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளனர். உடனடியாக அவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் அவர்களுக்கு இந்த வகை மருந்து எங்கிருந்து கிடைத்தது என்பது குறித்த விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.