1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : திங்கள், 25 செப்டம்பர் 2017 (14:11 IST)

மௌனப்புரட்சியில் தமிழக மக்கள் - அடிமைகள் உடம்பில் ரத்தம் எதற்கு?

சிலர் (அ தி மு க அமைச்சர்கள் அல்ல) ஆசைக்கும், தேவைக்கும், ஊரார் கால் பிடிப்பார்; ஒரு மானம் இல்லை! அதில் ஈனம்  இல்லை! அவர் எப்போதும் வால் பிடிப்பார் (மத்திய பிஜேபிக்கு அல்ல).


 
 
தங்களின் பதவிக்காக, ஊழல் வழக்குகளுக்கு பயந்து புதுப்புது கதைகள் பேசி வரும் ஈ பி எஸ் அண்ட் கோ ஒரு புறம். தர்ம யுத்தம் முடித்த களைப்பில் ஒ  பி எஸ் அண்ட் கோ ஒரு புறம், தங்களின் குடும்ப ஆதிக்கம் அ தி மு க வை விட்டு போக்கி விடுமோ என்ற அச்சத்தில் தினகரன் அண்ட் கோ மறு புறம். இவர்கள் மத்தியில் தான் தமிழக  ஆட்சியும் அதிகாரமும். 
 
முழுவதும் சம்பித்து போன அரசு இயந்திரம். நாளும் போராட்டங்கள். அனைத்து துறைகளும் செயல் இழந்து மத்திய அரசிடம் மண்டியிட்டு கிடக்கும் இந்த நேரத்தில் காவல் துறை மட்டும் படு ஜோராக வேலை செய்கிறது. 
 
ஜன நாயகத்தின் எஜமானர்கள் ஆகிய  மக்கள் ஒரு மௌன புரட்சிக்கு தயாராகி விட்டன. ஜெயலலிதா மரணம் அடைந்த உடனே கலைக்கப்பட வேண்டிய ஒரு அரசு, யாரோ ஒரு சிலரின் கை பாவை ஆகிவிட்டது.  மக்கள் பார்வையாளர்கள் மட்டும் அல்ல. மிகச்சிறந்த விற்பன்னர்கள் கூட. தெர்மோகோல் ராஜு, சோப்பு நுரை கருப்பண்ணனை பார்த்து மக்கள் சிரிக்க மட்டும் அல்ல, மௌன புரட்சிக்கு தயாராகி விட்டார்கள்.


 
 
நெடு வாசல், கதிராமங்கலம் போராட்ட்டங்களை மக்கள் ஒரு பிராந்திய பிரச்சனையாக பார்க்கவில்லை, களம் கண்ட அனைவரும் ஜெய ராமன்களே! இந்த அரசால் ஒரு திரு முருகன் காந்தியை  கைது செய்ய முடியும்! ஒரு வளர்மதி மேல் குண்டர் சட்டம் பாய்ச்ச முடியும்! ஆனால் ஆயிரம்,   ஆயிரம்,   திரு முருகன் காந்திகளும், வளர்மதிகளும், களத்திற்கு வந்தாகி விட்டது. 
 
ஒரு மெரீனாவிற்கு தான் திண்டுக்கல் பூட்டு போட இந்த அரசால் முடியும். லட்சம் களங்களுக்கு/மெரீனாகளுக்கு  பூட்டு போடா முடியுமா என்ன?  
 
அனிதாவின் பிரச்சனை ஒரு சமூகத்தின் பிரச்சனை அல்ல. அது இந்த சமூகத்தின் நீதி பிரச்சனை. ராஜினாமா செய்த ஒரு சபரிமளாவை மட்டும் இந்த அரசுக்கு தெரியும். ஆனால் தெரியாத ஓன்று ஓர் ஆயிரம் சபரிமளாகள் தெருவுக்கு வந்து போராடுகிறார் என்பது.
 
தமிழக, தேசிய ஆட்சியாளர்கள் மறந்த ஒரு விசயம்! தாங்கள் ஆண்டு கொண்டிருக்கும் ஒரு இனம் ! 
 
பட்டினிக்கு அஞ்சாத ஒரு இனம்!
 
நெஞ்சை பிளந்த போதும் நீதி கேட்க அஞ்சிடாத ஒரு இனம் !
 
நேர்மை அற்றவர்களின் காலில் விழாத ஒரு இனம்!
 
சமூக நீதி சொன்ன திராவிட இனம் ! 
 
அந்த இனம்தான் மௌன புரட்சி செய்து கொண்டிருக்கிறது. அவர்கள் மௌனம் களையும் வரை எங்களை ஆளுக! 
 
அதுவரைதான் இந்த ஆட்சியின் நாட்கள்.

 
இரா காஜா பந்தா நவாஸ்