வியாழன், 12 பிப்ரவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By BALA
Last Modified: ஞாயிறு, 18 ஜனவரி 2026 (17:22 IST)

ஆம்னி பேருந்தில் 3 மடங்கு கட்டண உயர்வு!.. பொதுமக்கள் அதிர்ச்சி

omni
சென்னை போன்ற பெருநகரங்களில் வசிக்கும் மக்கள் பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகையின் போது தங்களின் சொந்த ஊருக்கு செல்வார்கள். ஏனெனில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்தும் தொழிலுக்காகவும், வேலைக்காகவும் பலரும் சென்னையில் தங்கியிருக்கிறார்கள். அவர்களெல்லாம் பண்டிகை நாட்களில் குறிப்பாக தொடர் விடுமுறை கிடைக்கும்போது சொந்த ஊருக்கு செல்ல திட்டமிடுவார்கள்.

அதை பயன்படுத்திக் கொண்டு ஆம்னி பேருந்துகளில் பல மடங்கு கட்டணம் உயர்த்தப்பட்டு வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த கொள்ளை பல வருடங்களாகவே நடந்து வருகிறது. ஆனால் இது பற்றி சம்பந்தப்பட்ட துறை அமைச்சரிடம் கேட்டால் ’பொதுமக்கள் யாரும் புகார் கொடுக்கவில்லை.. அவர்கள் விருப்பப்பட்டு கட்டணத்தை செலுத்துகிறார்கள்.. புகார் கொடுத்தால் அதுபற்றி நடவடிக்கை எடுப்போம்’ என சம்பிரதாயமாக சொல்வார்கள். இந்த வருடமும் அப்படித்தான் சொன்னார்கள்.

பொங்கலை முன்னிட்டு கடந்த 13, 14 ஆகிய தேதிகளில் சென்னையிலிருந்து திருச்சி, சேலம், மதுரை, திண்டுக்கல், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கோவை, கரூர், ஈரோடு உள்ளிட்ட பல ஊர்களுக்கும் மக்கள் பயணித்தனர். அப்போது ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணமும் வசூலிக்கப்பட்டதாக புகார் எழுந்தது.

தற்போது விடுமுறை முடிந்து பலரும் இன்று சென்னை திரும்புகிறார்கள்.  இந்நிலையில், ஆம்னி பேருந்துகளில் 3 மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்திருக்கிறார்கள். அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாக இருக்கிறது.