வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 25 ஏப்ரல் 2024 (13:26 IST)

மக்களே உஷார்..! தமிழகத்தில் 5 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும்..! வானிலை மையம் எச்சரிக்கை...!!

வருகிற 29ஆம் தேதி வரை அதிகபட்ச   வெப்பநிலை  தமிழக  மாவட்டங்களின்  ஓரிரு இடங்களில்  இயல்பை விட 2° – 4° செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
25.04.2024 முதல் 28.04.2024 வரை: தென் தமிழக கன்னியாகுமாரி, திருநெல்வேலி மாவட்டங்கள், தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு  இடங்களில் லேசான மழை  பெய்யக்கூடும்.  ஏனைய தமிழகம், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என கூறப்பட்டுள்ளது. 29.04.2024 முதல் 01.05.2024 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
 
அடுத்த 5 தினங்களுக்கான அதிகபட்ச வெப்பநிலை:
 
25.04.2024 முதல் 29.04.2024 வரை:
 
அதிகபட்ச   வெப்பநிலை  தமிழக  மாவட்டங்களின்  ஓரிரு இடங்களில்  இயல்பை விட 2° – 4° செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஒருசில இடங்களில் 38°–41° செல்சியஸ். 
 
ஈரப்பதம்: 
 
25.04.2024 முதல் 29.04.2024 வரை:
காற்றின் ஈரப்பதம் தமிழக உள்  மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில்  பிற்பகலில் 30-50% ஆகவும், மற்ற நேரங்களில் 40-75% ஆகவும் மற்றும் கடலோரப்பகுதிகளில் 50-80% ஆகவும்  இருக்கக்கூடும். 
 
அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது  ஓரிரு இடங்களில்  அசௌகரியம் ஏற்படலாம்.
 
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான முன்னறிவிப்பு:
 
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும்  இருக்கக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.