ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 29 டிசம்பர் 2020 (23:01 IST)

பம்பர் மாட்டியிருந்ததால் அபராதம்-வட்டார போக்குவரத்து ஆய்வாளர்கள் அதிரடி

கரூர் மாவட்டத்தில் நான்கு இடங்களில் வட்டார போக்குவரத்து ஆய்வாளர்கள் அதிரடி ! ஆங்காங்கே வாகனம் முன்பு பொறுத்தப்பட்டிருந்த  பம்பர்களை கழட்டியதோடு, பம்பர் மாட்டியிருந்ததற்காக அபராதம் விதித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 
சாலை விபத்துக்களின் போது ஏற்படும் உயிரிழப்புகளுக்கு, நான்கு சக்கர வாகனங்களில் பொருத்தப்பட்டிருக்கும் பம்பர்கள் முக்கிய பங்கு வகிக்கிறது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. இதையடுத்து 2017 ஆம் வருடம் மத்திய போக்குவரத்து அமைச்சகம் காரிலிருந்து பம்பர்களை அகற்ற உத்தரவிட்டது. இது குறித்து தமிழக போக்குவரத்துத் துறை தொடர்ந்து  நான்கு சக்கர வாகனம் வைத்திருப்பவர்களிடம் தெரிவித்து வந்தது. இந்நிலையில் தற்போது அடுத்தகட்ட நடவடிக்கையில் அதிகாரிகள் இறங்கியுள்ளனர். இதற்காக பல்வேறு இடங்களில் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் சோதனைகளை மேற்கொண்டு வந்தனர். மேலும் சோதனை நடக்கும் இடத்திலேயே பம்பர்களை கழற்றி விடுவதோடு, வாகன ஓட்டிகளையும் எச்சரித்து வந்தனர். இந்நிலையில், தற்போது விதிகளை மீறி பம்பர் பொருத்தப்பட்டுள்ள வாகனங்கள் மீது கடுமையான  நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இதன் ஒரு பகுதியாக , பம்பர்களை கழட்டாத வாகன ஓட்டிகளுக்கு 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும், 6 மாதம் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் எனவும்  தமிழக வட்டார போக்குவரத்துத் துறை அதிகாரிகள் எச்சரிக்கைவிடுத்துள்ளனர். இந்நிலையில், கரூர் வட்டார போக்குவரத்து அலுவர் க.ஆனந்த் தலைமையில், மோட்டார் வாகன ஆய்வாளர் (நிலை 1) ச.சரவணன் ஆகியோர் அடங்கிய குழுவினர் கரூர் வெங்கக்கல்பட்டி பிரிவு சாலையில் இன்று மாலை முதல்வர் இரவு வரை வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். மேலும்,, இந்த தணிக்கையின் போது அவ்வழியாக திண்டுக்கல், திருச்சி, திருப்பூர், கோவை ஆகிய மாவட்டங்களுக்கு சென்ற சொகுசு கார்கள், சரக்கு வாகன்ங்களின் முன்பு பொருத்தப்பட்டிருந்த பம்பர்களை கழட்ட வைத்து சோதனை அறிக்கைகள் வழங்கி அபராதத்தொகையினை வசூலித்தனர். இதே போல, கரூர் வட்டார போக்குவரத்து அலுவலர் க.ஆனந்த் அறிவுறுத்தலின் படி, மண்மங்கலம், அரவக்குறிச்சி மற்றும் குளித்தலை பகுதி அலுவலக மோட்டார் வாகன ஆய்வாளர்கள் வாகன தணிக்கை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், ஏற்கனவே கடந்த சில தினங்களுக்கு முன்பாகவே இந்த பம்பர் பொறுத்தக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்ட நிலையில்., அந்த அறிவுரையை பின்பற்றாத வாகனங்களுக்கு இன்று அபராதம் விதிக்கப்பட்டு வாகனங்களில் இருந்த வாகன பம்பர்கள் அகற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.