ஆசிரியர்களுக்கு எதிராக மாணவர்கள், பெற்றோர் மறியல்: ஈரோட்டில் பதற்றம்
அரசு ஆசிரியர்களின் போராட்டத்தை கண்டித்து ஈரோட்டில் பெற்றோர்களும் மாணவர்களும் சாலை மறியல் போரட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த ஒரு வாரமாக ஜாக்டோ ஜியோ அமைப்பை சேர்ந்த ஆசிரியர்கள் உள்பட அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்து வருவதால் அரசுப்பணிகளும், பள்ளிப்பணிகளும் பெரும் பாதிப்பில் உள்ளது. இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்தும் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டத்தில் இருந்து பின்வாங்கவில்லை.
ஆசிரியர்களின் இந்த போராட்டத்தால் மாணவர்களும், பெற்றோர்களும் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். ஆசிரியர்கள் போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அவர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப கோரி வலியுறித்தியும், தேர்வு நெருங்கும் நேரத்தில் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபடுவது குழந்தைகளின் எதிர்காலத்தை பாதிக்கும் என கூறியும் ஈரோட்டில் பெற்றோர்களும், மாணவர்களும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே நாளை பணியில் சேராத ஆசிரியர்களின் பணியிடங்கள் காலிப்பணியிடங்கள் என்று அறிவிக்கப்படும் என்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. ஆதலால் இந்த போராட்டம் விரைவில் முடியும் என பெற்றோர்கள் நம்பியிருக்கின்றனர்.