வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 11 ஜூன் 2018 (09:14 IST)

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசனை தாக்கிய மர்ம நபர்கள் யார்?

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவரும், காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளருமான பெ.மணியரசன் மர்ம நபர்களால், தஞ்சையில் கண்மூடித்தனமாக தாக்கப்பட்டார். இதனால் பலத்த காயமடைந்துள்ள நிலையில் தஞ்சை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 
நேற்றிரவு தஞ்சையில் இருந்து சென்னை செல்ல மணியரசன் தனது உதவியாளருடன் பைக்கில் வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென அவரை மடக்கிய இரண்டு மர்ம நபர்கள் அவரை பைக்கில் இருந்து கீழே தள்ளி கடுமையாக தாக்கிவிட்டு பின்னர் ஓடிவிட்டனர்.
 
இந்த நிலையில் படுகாயத்துடன் கீழே விழுந்து கிடந்த மணியரசனை அவரது உதவியாளர் தஞ்சை மருத்துவமனையில் சேர்த்தார். இதுகுறித்து மணியரசனின் உதவியாளர் கூறியபோது, 'பைக்கில் நாங்கள் இருவரும் ரயில் நிலையத்தை நோக்கி சென்று கொண்டிருந்தபோது திடீரென இரண்டு நபர்கள் பைக்கில் பின்னால் உட்கார்ந்திருந்த அய்யா அவர்களின் கையை பிடித்து இழுத்தனர். இதனால் நிலை தடுமாறி இருவரும் கீழே விழுந்தோம். அய்யாவை அந்த மர்ம நபர்கள் கடுமையாக தாக்கிவிட்டு ஓடிவிட்டனர்' என்று கூறினார்.
 
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் மணியரசன் மீதான இந்த தாக்குதலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.