காஷ்மீரை அடுத்து தமிழகத்திற்கும் ஆபத்து வரலாம்: ப.சிதம்பரம்
பாஜக அரசு எந்த ஒரு மசோதாவை கொண்டு வந்தாலும் அதனால் பொது மக்களுக்கு நன்மை இருக்கின்றதா? அல்லது தீமை இருக்கின்றதா? என்பது குறித்த ஆராய்ச்சி எல்லாம் இல்லாமல் உடனடியாக அந்த மசோதாவை எதிர்க்க வேண்டும் என்ற கொள்கையில் ஒரு சில கட்சிகள் உள்ளன. இந்த நிலையில் பாஜக அரசு இன்று எடுத்த காஷ்மீர் விவகாரம் குறித்த அதிரடி நடவடிக்கைக்கு காங்கிரஸ், திமுக உள்பட பல்வேறு கட்சிகள் ஒட்டுமொத்தமாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அனேகமாக இந்த நடவடிக்கையை ஆதரித்த ஒரே கட்சி அதிமுக ஒன்றாகத்தான் இருக்கும்
இந்த நிலையில் காஷ்மீரில் 370 ஆவது பிரிவை ரத்து செய்ததன் மூலம் அனைத்து மாநிலங்களுக்கும் தவறான செய்தியை மத்திய அரசுக்கு அனுப்புகிறது என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் அவர்கள் தெரிவித்துள்ளார்
காஷ்மீர் மாநிலத்திற்கு ஏற்பட்டுள்ள நிலைமை நாளை எந்த மாநிலத்திற்கும் ஏற்படலாம் என்றும், நாளை இதே சட்டப்பிரிவை கொண்டு ஒடிசா, மேற்கு வங்கத்தை, ஏன் தமிழகத்தையும் பிரிக்க வாய்ப்பு உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
மாநிலங்களின் உரிமையைப் பாதுகாப்பது தான் மாநிலங்களின் பணி என்றும், மாநிலங்களை நகராட்சி போல மத்திய அரசு நடத்துகிறது என்றும் ப.சிதம்பரம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ப.சிதம்பரத்தின் இந்த எதிர்ப்பால் பாஜக அரசு அதிர்ச்சியில் உள்ளதாக கூறப்படுகிறது