என்னது ஹோட்டல்களை மூடுகிறோமா ? – அமைச்சரை சந்தித்த பின் உரிமையாளர்கள் அந்தர்பல்டி !

Last Modified புதன், 19 ஜூன் 2019 (08:36 IST)
தண்ணீர் தட்டுப்பாட்டால் தமிழகத்தில் ஹோட்டல்களை மூடுவதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கும் நிலையில் அதை ஹோட்டல் உரிமையாளர்கள் மறுத்துள்ளனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பருவமழைப் பொய்த்ததால் இந்த ஆண்டு கோடைக்காலம் முழுவதும் தமிழகமெங்கும் தண்ணீர் பிரச்சனை தலை விரித்து ஆடுகிறது. குறிப்பாக சென்னை போன்ற பெருநகரங்களில் தண்ணீர் பிரச்சனை மிகவும் அதிகமாக இருக்கிறது. சென்னைக்கு தண்ணீர் கொடுக்கும் ஏரிகள் வறண்டு விட்டதோடு, மழை இல்லாத காரணத்தால் நிலத்தடி நீரும் வற்றிவிட்டதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

தண்ணீர்ப் பற்றாக்குறையால் சென்னை உள்ள பல ஃசாப்ட்வேர் நிறுவனங்கள் தண்ணீர் இல்லாதால் தங்கள் பணியாளர்களை வீட்டில் இருந்தே பணிபுரியுமாறு கூறிவிட்டது. மேலும் சில ஹோட்டல்கள் தண்ணீர் பற்றாக்குறையால் மூட விருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. அதேப் போல சில ஹோட்டல்களில் டாய்லட்களையும் தண்ணீர்ப் பற்றாக்குறையால் மூடி வைத்த அவலமும் நடந்தது.

இதையடுத்து குடிநீர் தட்டுப்பாட்டைச் சமாளிப்பது எப்படி என்பது குறித்து, சென்னை எம்.ஆர்.சி. நகரில் ஓட்டல் உரிமையாளர்களுடன் அமைச்சர் வேலுமணி ஆலோசனை நடத்தினார். அதன் பிறகு பேசிய ஹோட்டல் உரிமையாளர்கள் ’தமிழக அரசின் நடவடிக்கைகளால் போதுமான அளவு தண்ணீர் கிடைத்து வருகிறது. மேலும் பற்றாக்குறைக்கு கூடுதல் விலை கொடுத்து தனியார் குடிநீர் லாரிகள் மூலம் தண்ணீர் பெற்று வருகிறோம். ஓட்டல்கள் மூடப்படுவதாகக் கூறப்படும் தகவல்கள் முற்றிலும் தவறானது.’ எனத் தெரிவித்துள்ளனர்.இதில் மேலும் படிக்கவும் :