வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 20 அக்டோபர் 2024 (14:34 IST)

தமிழ்த் தாய் வாழ்த்து குறித்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: ஓபிஎஸ்

தமிழ்த் தாய் வாழ்த்து குறித்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
தமிழ்த் தாய் வாழ்த்து குறித்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க வலியுறுத்தல்
மேதகு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கலந்து கொண்ட சென்னை தூர்தர்ஷன் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில், "தமிழ்த் தாய் வாழ்த்து” பாடும்போது, "தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும்" என்ற வரி விடுபட்டது என்பது மிகப் பெரிய தவறு. இதில் யாருக்கும் எவ்வித மாறுபட்ட கருத்தும் இருக்க முடியாது. இது கவனக் குறைவு காரணமாக ஏற்பட்ட தவறு என்று சென்னை தூர்தர்ஷன் விளக்கம் அளித்திருக்கிறது. 
 
எனவே, இது தூர்தர்ஷன் நிர்வாகம் செய்த தவறு. இதனை, மேதகு ஆளுநர் அவர்கள்தான் செய்தார் என்று கற்பனை செய்து கொண்டு, அவரை வசைபாடுவது என்பது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. இந்தக் குற்றச்சாட்டினை மேதகு ஆளுநர் அவர்களே மறுத்துள்ளார்கள்.
 
இந்தத் தருணத்தில், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் நடித்த 'பெற்றால்தான் பிள்ளையா' என்ற படத்தில் வரும் 
 
"தவறு என்பது தவறிச் செய்வது, 
தப்பு என்பது தெரிந்து செய்வது, 
தவறு செய்தவன் திருந்தப் பார்க்கணும், 
தப்புச் செய்தவன் வருந்தி ஆகணும்"
 
பாடல் வரிகளை சுட்டிக்காட்டக் கடமைப்பட்டிருக்கிறேன். இதற்கேற்ப, செய்த தவறினை தூர்தர்ஷன் நிர்வாகம் ஒப்புக் கொண்டிருக்கிறது. இதற்குப் பிறகும், மேதகு ஆளுநர் அவர்களை வசைபாடுவது என்பது அரசியல் விளம்பரத்திற்காக தரம் தாழ்ந்த விமர்சனங்கள் மேற்கொள்ளப்படுகிறதோ என்ற எண்ணம் மக்கள் மத்தியில் எழுந்துவிடும்.
 
Edited by Siva