வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 24 மே 2021 (11:57 IST)

கட்சியினரின் அராஜகப்போக்கை முதல்வர் தடுக்க வேண்டும்… ஓபிஎஸ் அறிக்கை!

சென்னை மாநகராட்சியில் களப்பணியாளர்களை புதிதாக சேர்க்க சொல்லி திமுகவினர் மிரட்டுவதாக புகார் எழுந்துள்ளது. இது சம்மந்தமாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் ‘அரசு அதிகாரிகளை கட்சிக்கு அப்பாற்பட்டவளாகப் பார்க்க வேண்டும், அவர்களும் அப்படியே நடக்க வேண்டும்என்று கூறியிருக்கிரார் பேரறிஞர் அண்ணா. அதாவது அரசுப் பணிகளில் கட்சியினரின் தலையீடு இருக்கக்கூடாது என்பதுதான் இதன் பொருள். ஆனால் இதற்கு முற்றிலும் முரணான வகையில் திமுக-வினரின் செயல்பாடுகள் இருக்கின்றன.

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறுபதம் என்ற தமிழ் பழமொழிக்கேற்ப ஒரே ஒரு உதாரணத்தை நான் இங்கே குறிப்பிட விரும்புகிறேன். சென்னையில் கொரோனா தொற்று நோய் தடுப்புப் பணியில் நன்கு பயிற்சி பெற்ற களப்பணியாளர்கள், சுகாதாரம், பொறியியல், வருவாய்த் துறை பணியாளர்களுடன் இணைந்து திறம்பட பணிபுரிந்து வருகின்றனர். இதன் காரணமாக, தமிழ்நாட்டில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தாலும், சென்னையைப் பொறுத்தவரையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சற்று குறைந்து வருகிறது. மே 12, காலை ஒரு நாளில் 7,564 என்றிருந்த கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மே 23 ம் தேதி காலை நிலவரப்படி 5559 ஆக குறைந்திருக்கிறது. இது மிகவும் ஆறுதலான செயல்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், திமுகவினர் சென்னை அடையாறில் உள்ள மாநகராட்சி அலுவலகத்திற்கு சென்று தற்போது இருக்கும் களப் பணியாளர்களை நீக்கிவிட்டு அவர்கள் சொல்லும் நபர்களை பணியில் அமர்த்த வேண்டும் என்று மிரட்டி இருப்பதாகவும், அதற்கு அதிகாரிகள் கட்சியினரின் பரிந்துரையின் பேரில் களப் பணியாளர்கள் யாரும் நியமிக்கப்படுவதில்லை என்று தெரிவித்ததாகவும், பயிற்சி பெற்று திற்ம்பட பணியாற்றிக் கொண்டிருக்கும் தற்போதைய களப் பணியாளர்களை மாற்றியமைத்தால் நோய்த் தடுப்புப் பணியில் தொய்வு ஏற்படும் என்று எடுத்துக் கூறியுள்ளதாகவும் பத்திரிகையில் செய்தி வெளிவந்துள்ளது.

இதுபோன்ற முறையை அனைத்து இடங்களிலும் திமுகவினர் கடைபிடித்தால் கொரோனா நோய்த் தடுப்புப் பணியில் தொய்வு ஏற்பட்டு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதோடு, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருக்கும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கும் அவப் பெயர் ஏற்படக்கூடிய சூழ்நிலை உருவாகும். எனவே கொரோனா நோய்த் தடுப்புப் பணிகள் தொய்வின்றி தங்கு தடையின்றி நடக்க ஏதுவாக, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இதில் உடனடியாக தலையிட்டு இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோரைக் கண்டறிந்து அவர்கள்மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்எனக் குறிப்பிட்டுள்ளார்.