ஜெயலலிதா, சசிகலா பேசிய சர்ச்சை வீடியோ: வருமான வரித்துறை சோதனையின் பகீர் பின்னணி?
ஜெயலலிதா, சசிகலா பேசிய சர்ச்சை வீடியோ: வருமான வரித்துறை சோதனையின் பகீர் பின்னணி?
சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள ஜெயா தொலைக்காட்சி அலுவலகம் உள்ளிட்ட சசிகலா தொடர்புடைய பலரது வீட்டிலும், நிறுவனங்களிலும் வருமான வரித்துறையினர் இன்று காலை முதலே சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனைக்கு காரணம் ஒரு வீடியோ என தகவல்கள் வருகின்றன.
10 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை 6.30 மணி முதல் ஜெயா டிவி அலுவலகத்தில் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையை ஜெயா தொலைக்காட்சியும் உறுதி செய்துள்ளது. மேலும் ஜெயா டிவி நிர்வாகத்தை கவனித்து வரும் விவேக் தொடர்புடைய மற்ற சில இடங்களிலும் சோதனை நடந்து வருவதாக கூறப்படுகிறது.
மேலும் சசிகலா, தினகரன் ஆதரவாளரான பெங்களூர் புகழேந்தி வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது. கொடநாடு எஸ்டேட், சசிகலாவின் தம்பி திவாகரன் வீடு என 20 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடந்து வருகிறது.
முறையாக வருமான வரி கட்டாததால் இந்த சோதனை நடைபெறுவதாக கூறப்பட்டாலும் இது ஒரு வீடியோவுக்காக நடத்தப்படுவதாகவும் அரசியல் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது அவர் சசிகலாவுடன் பேசிய வீடியோ ஒன்று தங்களிடம் உள்ளதாக திவாகரனின் மகன் ஜெயானந்த் கூறியிருந்தார்.
இதற்காகத்தான் தற்போது இந்த வருமான வரித்துறை சோதனை நடந்து வருவதாக கூறப்படுகிறது. அந்த சர்ச்சை வீடியோவை வெளியிட்டால் பலருடைய சாயம் வெளுத்துவிடும் எனவும், அதனை விரைவில் வெளியிட உள்ளதாகவும் திவாகரன் மகன் ஜெயானந்த் கூறியிருந்தார். இந்த சூழலில் திவாகரன் வீட்டிலும் தற்போது வருமான வரித்துறை சோதனை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.