தாமரை தேசிய மலரே இல்லை; அதிர்ச்சியளித்த ஆர்டிஐ தகவல்
தாமரை தேசிய மலர் இல்லை என்றும் இந்தியாவுக்கு தேசிய மலரே கிடையாது என்றும் தகவல் அறியும் உரிமை சட்டம் தெரிவித்துள்ளது.
தாமரை இந்தியாவின் தேசிய மலராக அறிவிக்கப்பட்டதா என லக்னோவைச் சேர்ந்த 11ஆம் வகுப்பு மாணவி ஒருவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனு தாக்கல் செய்தார். அந்த மனு சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள தாவரவியல் ஆய்வு மையத்துக்கு அனுப்பப்பட்டது.
இதற்கு அந்த மையத்தின் இளநிலை நிர்வாக அதிகாரி தபாஷ் குமார் கோஷ் பதிலளித்தார். அவர் அளித்த பதில், தாவரவியல் ஆய்வு மையமானது இந்தியாவுக்கான தேசிய மலராக எந்த மலரையும் அறிவிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அந்த மாணவி கூறியதாவது:-
சிறுவயதிலிருந்தே மற்றவர்கள் படித்தது போல் இந்தியாவின் தேசிய மலர் தாமரை என்று நானும் படித்தேன். அதன் உண்மைத்தன்மை குறித்து அறிவதற்காக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனு தாக்கல் செய்தேன்.
மத்திய அரசு தாமரை மலரை தேசிய மலராக அறிவிக்க வேண்டும். இல்லையென்றால் இந்த குழப்பத்தை தெளிவுப்படுத்த சரியான தகவலை வெளியிட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
மேலும் இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுத திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார்.