1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 5 அக்டோபர் 2018 (13:18 IST)

சாஸ்த்ராவோடு அரசு அதிகாரிகள் கூட்டு – பொதுமக்கள் கண்டனம்

திருச்சி தஞ்சாவூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சாஸ்த்ரா பல்கலைக்கழகம் தமிழக அரசுக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாக தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்ற தீர்ப்புக்குப் பின்னும் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் நிலத்தை விட்டுத்தர மறுத்து வருகிறது.

தஞ்சையில் திறந்த வெளிச்சிறை கட்டுவதற்காக தமிழக சிறைத்துறைக்கு ஒதுக்கிய அரசு நிலத்தை சாஸ்திரா பல்கலைக் கழகம் ஆக்கிரமித்து முப்பது ஆண்டுகளாக அனுபவித்து வருகிறது.

தஞ்சையில்  தமிழக அரசு சுமார் 60 ஏக்கர் நிலத்தைத் திறந்த வெளிச்சிறை கட்டுவதற்காக சிறைத்துறைக்கு அளித்தது. அதன் ஒருபகுதியை சாஸ்த்ரா பல்கலைக்கழகம் ஆக்ரமித்து தனக்கான கட்டிடங்களைக் கட்டி பயன்படுத்தி வருகிறது. இதுதொடர்பாக சிறைத்துறை சார்பில் தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றம் சாஸ்த்ரா பலகலைக் கழகத்திற்கு எதிராக தீர்ப்பளித்தது.

இருந்தும் தீர்ப்பை ஏற்காமல் சாஸ்த்ரா இடத்தை ஒப்படைக்காமல் 30 ஆண்டுகளாக இழுத்தடித்து வருகிறது. ஆக்ரமிப்பு செய்யப்பட்ட இடத்திற்கு பதிலாக புதுக்கோட்டையில் மாற்று நிலம் தருவதாகவும் அல்லது ஆக்ரமிப்பு செய்யப்பட்ட இடத்திற்கு இரண்டு மடங்கு விலை தருவதாகவும் தெரிவித்தது. ஆனால் மாவட்ட நிர்வாகமும் சிறைத்துறையும் அதை ஏற்க மறுத்து விட்டது. இந்நிலையில் உயர்நீதி மன்றம் இடத்தை விட்டு வெளியேற சஸ்த்ராவுக்கு அக்டோபர் 3-ந்தேதி வரை கெடு விதித்திருந்தது. அந்த கெடுவும் முடிவடைந்துள்ள நிலையில் சாஸ்த்ரா இன்னும் காலி செய்யாமல் உள்ளது.

அதிகாரிகளும் இதுகுறித்து விரைந்து செயல்படாமல் பல்கலைக்கழகத்தோடு சேர்ந்து செயல்படுவதாகவும் புகார்கள் வெளிவந்துள்ளன. அதிகாரிகளின் மெத்தனப் போக்கு குறித்து பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.