திங்கள், 25 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வெள்ளி, 16 பிப்ரவரி 2024 (12:47 IST)

நோ தமிழ்.. நோ ஆங்கிலம்..! ஒன்லி ஹிந்தி தான்..!! ரயில் பயணிகள் பரிதவிப்பு..!!

passengers
கோவில்பட்டி ரெயில்வே நிலையத்தில் டிக்கெட் கவுண்டரில் இருந்த வட மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர்,  ஹிந்தியில் பேசினால் மட்டும் தான் தன்னால் டிக்கெட் கொடுக்க முடியும் எனக் கூறியதால் பயணிகள் கடும் அவதி அடைந்ததோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
 
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செயல்பட்டு வரும் ரெயில்வே நிலையம் மதுரை ரெயில்வே கோட்டத்தில் அதிக வருவாய் தரும் ரெயில்வே நிலையங்களில் ஒன்றாக உள்ளது.
 
கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் மக்கள் மட்டுமின்றி தூத்துக்குடி, நெல்லை மாவட்டம், விருதுநகர் மாவட்டம், தென்காசி மாவட்டம் என 4 மாவட்ட மக்கள் கோவில்பட்டி ரெயில்வே நிலையத்தினை பயன்படுத்தி வருகின்றனர். 
 
குறிப்பாக ரெயில் பயணிகள் கட்டணத்தில் அதிகளவில் கோவில்பட்டி ரெயில்வே நிலையம் வருமானத்தினை ஈட்டி வருகிறது. இவ்வாறு அதிகமாக மக்கள் வரும் ரெயில்வே நிலையத்தில் முன்பதிவு செய்ய மற்றும் முன்பதிவு இல்லாத டிக்கெட் பெற ஒரு கவுண்டர் தான் செயல்பட்டு வருகிறது.

இதனை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை குறித்து பலமுறை வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்கவில்லை. இது ஒரு புறம் இருக்க அந்த ஒரே ஒரு கவுண்டரில் வடமாநிலத்தினை சேர்ந்த பணியாளர்கள் தான் பணிபுரிந்து வருகின்றனர். 
 
இந்நிலையில் வழக்கம் போல வடமாநிலத்தினை சேர்ந்த பணியாளர் கவுண்டரில் இருந்துள்ளார். அவருக்கு தமிழ், ஆங்கிலம் எதுவும் தெரியவில்லை என்று கூறப்படுகிறது. ஹிந்தி மட்டும் தெரிந்து இருந்ததால் டிக்கெட் எடுக்க வந்தவர்கள், தட்கல் மூலமாக டிக்கெட் முன் பதிவு செய்யவந்தவர்கள் கூறிய விபரங்களை புரிந்து கொள்ள முடியமால் அந்த பணியாளர் பரிதவித்து மட்டுமின்றி, ஹிந்தியில் பேசினால் மட்டும் தான் விரைந்து தன்னால் டிக்கெட் கொடுக்க முடியும், இல்லை என்றால் மெதுவாக தான்  தருவேன் என்று கூறியுள்ளார். 
 
இதனால் தட்கலில் முன்பதிவு செய்ய வந்தவர்கள் பரிதவித்தனர். மேலும் முன்பதிவு இல்லாத  டிக்கெட் எடுக்க வந்தவர்களும் சிரமம் அடைந்தனர். 30 நிமிடம் முதல் 45நிமிடம் வரை டிக்கெட் எடுக்க நேரமானதால் ஆத்திரமடைந்த பயணிகள் அங்குள்ள ஊழியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 
 
ticket counter
இதுகுறித்து தகவல் கிடைத்தும் ரெயில்வே நிலைய போலீசார் மற்றும் கிழக்கு காவல்நிலைய போலீசார் வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இது குறித்து நிலைய மேலாளரிடம் புகார் கொடுங்கள் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுக்க மேலாளர் அலுவலகம் சென்று போது அங்கு பணியில் இருந்த ஊழியர் அலட்சியமாக பதில் கூறியதால் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. 
 
இதையெடுத்து போலீசார் இருதரப்பினையும் சமதானப்படுத்தி புகார் அளிக்குமாறு கூறினர். அடுத்தடுத்து நடைபெற்ற இந்த பிரச்சினையினால் ரெயில்வே நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

 
தமிழ் அல்லது ஆங்கிலம் தெரிந்த ஊழியரை பணியில் அமர்த்த வேண்டும், இல்லை, தமிழ் தெரிந்த பணியாளரை உதவிக்கு அமர்த்த வேண்டும், இதனால் சரியான நேரத்தில் டிக்கெட் எடுக்க முடியாத நிலை இருப்பதாக ரெயில் பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர்.