1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 2 மார்ச் 2021 (14:44 IST)

கண்டா வர சொல்லுங்க.. காத்து வாங்கும் தேமுதிக அலுவலகம்! - நிர்வாகிகள் அதிர்ச்சி

இன்று மாலை தேமுதிக – அதிமுக இடையே கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற உள்ள நிலையில் விருப்ப மனு தாக்கல் செய்ய ஆட்கள் வராதது ஏமாற்றத்தை அளித்துள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில் தொடர்ந்து தேமுதிகவுடன் கூட்டணி குறித்து பேசாமல் இருந்து வந்த அதிமுக இன்று அமைச்சர் தங்கமணி தலைமையில் தேமுதிகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட இருந்தது.

இந்நிலையில் அதிமுகவில் தேமுதிகவுக்கு உரிய மரியாதை அளிக்கப்படவில்லை என கருதிய தேமுதிகவினர் அமைச்சர் தங்கமணியுடனான கூட்டணி பேச்சுவார்த்தையை தவிர்த்தது பரபரப்பை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து தேமுதிக விருப்ப மனு விநியோகத்தை தொடங்கியுள்ள நிலையில் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு மீண்டும் அதிமுக அழைப்பு விடுத்துள்ளது.

இன்று மாலை அதிமுக – தேமுதிக நிர்வாகிகள் சந்தித்துக் கொள்ள உள்ள நிலையில் அமைச்சர் தங்கமணி, வேலுமணி உள்ளிட்டோருடன் தேமுதிகவின் எல்.கே.சுதீஷ் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

ஆனால் இன்று முதல் தேர்தல் விருப்ப மனுக்கள் விநியோகம் மற்றும் பெறும் பணிகள் தொடங்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் தேமுதிக அலுவலகத்தில் விருப்ப மனு அளிக்க ஆட்கள் வராமல் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாலை கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த உள்ள நிலையில் உடன்பாடு ஏற்பட்டால் விருப்பமனுவுக்கு செய்த செலவு வீணாகலாம் என்பதால் பேச்சுவார்த்தைக்கு பிறகு விருப்ப மனு வழங்க தேமுதிகவினர் சிலர் யோசித்திருக்கலாம் என்றும் பேசிக் கொள்ளப்படுகிறது.