1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : திங்கள், 22 ஜனவரி 2024 (17:24 IST)

ராமர் மீதான நம்பிக்கையை எந்த ஆட்சியாலும் மாற்ற முடியாது..! வானதி சீனிவாசன்.!!

vanathi
ராமர் மீதான நம்பிக்கையை எந்த ஆட்சியாளர் மாற்ற முடியாது என்று பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
 
ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கோவை ஆர்.எஸ்.புரம் அருகேயுள்ள ஸ்ரீ ராமர் பஜனை திருக்கோவிலில் பாஜக சார்பில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. 
இதில் பாஜக தேசிய மகளிரணித் தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் கலந்து கொண்டார். 
 
அப்போது அனுமதியின்றி சாலையோரத்தில் வாகனத்தில் இருந்து நேரலை காட்சிகளை ஒளிபரப்ப காவல் துறையினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பாஜகவினருக்கும், காவல் துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

vanathi
 
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வானதி சீனிவாசன்,  சீப்பை ஒழித்து வைத்தால் கல்யாணம் நின்று விடும் என்பது போல தமிழக அரசு செயல்படுகிறது என்றும் கோவில்களில் சிறப்பு பூஜை, அன்னதானம் நடத்த அரசு அனுமதி மறுக்கிறது என்றும் குற்றம் சாட்டினார்.

நாங்கள் பொய் சொன்னதாக தமிழக அரசு சொன்னது. ஆனால் பொய் பரப்புவது தமிழக அரசு தான் இன்று அவர் கூறினார். ஒருபக்கம் உரிமை மறுக்கவில்லை எனக்கூறிக் கொண்டு, காவல் துறையை வைத்து அரசு மிரட்டல் விடுக்கிறது என்று தெரிவித்த வானதி சீனிவாசன், மொகலாயர் ஆட்சி, ஒளரங்கசீப் ஆட்சி அல்ல வரி கட்டினால் தான் கோவிலுக்கு செல்ல முடியும் என்ற நிலையை திரும்ப கொண்டு வர முயற்சி செய்கிறது. அது நடக்காது என்று கூறினார்.
 
vanathi srinivasan
மக்களின் பக்தி உணர்வை அடக்க நினைத்தால், தமிழக மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்றும் மக்களின் பக்தி உணர்வை திராவிட மாடல் அரசால் நிறுத்தி விட முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

 
திராவிட மாடல் இந்துக்களுக்கு எதிரான மாடல் என்பது மீண்டுமொரு முறை நிரூபிக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார். ராமர் மீதான நம்பிக்கையை ஒருபோதும் எந்த ஆட்சியாலும் மாற்ற முடியாது என்று வானதி சீனிவாசன் தெரிவித்தார்.