புதுவை முதல்வருக்கு கொரோனா தொற்றா? பரிசோதனை முடிவு
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பதும் இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டிவிட்டது என்பதும் அதிர்ச்சிகரமான செய்திகள் ஆகும்
இந்த நிலையில் பாமர மக்கள் மட்டுமின்றி பதவியில் இருப்பவர்களும் கொரோனா வைரஸ் தொற்றால் அவ்வப்போது பாதிக்கப்பட்டு வருவது அதிர்ச்சி அளித்து வருகிறது. தமிழகத்தில் மட்டும் ஐந்து எம்எல்ஏக்கள் கொரோனா வைரஸால் பாதிப்பு அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் சமீபத்தில் புதுவை மாநில முதலமைச்சர் அலுவலக ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று அறிகுறி இருந்ததை அடுத்து அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. சோதனையின் முடிவில் அவருக்கு கொரோனா உறுதியானதால் புதுவையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
இதனை அடுத்து முதல் அமைச்சர் நாராயணசாமி உள்பட முதல்வர் அலுவலக ஊழியர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாகவும் தற்போது இந்த பரிசோதனையின் முடிவுகள் வெளிவந்திருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது
புதுவை முதல்வர் நாராயணசாமி உள்பட முதலமைச்சர் அலுவலக ஊழியர்கள் யாருக்கும் கொரோனா இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக பரிசோதனையின் முடிவு தெரிவிக்கிறது என்று முதல்வர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒரே ஒரு ஊழியருக்கு மட்டுமே கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவரும் தற்போது குணமாகி வருவதாகவும் புதுச்சேரி முதல்வர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. புதுவை முதலமைச்சர் நாராயணசாமி அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்ற தகவல் அம்மாநில மக்களுக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது