செவ்வாய், 9 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Bala
Last Modified: செவ்வாய், 11 நவம்பர் 2025 (19:08 IST)

செங்கோட்டையன் சொன்னது உண்மையா?!.. நிர்மலா சீதாராமன் விளக்கம்!..

செங்கோட்டையன் சொன்னது உண்மையா?!.. நிர்மலா சீதாராமன் விளக்கம்!..
எம்ஜிஆர், ஜெயலலிதா உருவாக்கிய அதிமுக வலுவாக இருந்த நிலையில் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் அதிமுக பிளவுபட்டது. துவக்கத்தில் அது ஓபிஎஸ், எடப்பாடி பழனிச்சாமி என பிளவுபட்டது. அதன்பின் சசிகலா, டிடிவி தினகரன் என ஒருபக்கம்  பிரிந்து அதிமுக மூன்றாக செயல்படுவது போன்ற தோற்றம் உருவானது. அதன்பின் பன்னீர் செல்வத்தையும், பழனிச்சாமியையும் பாஜக ஒருங்கிணைத்தது.
 
ஆனாலும் ஒரு கட்டத்தில் அதிருப்தியடைந்த ஓ.பன்னீர்செல்வம் கட்சிக்கு எதிராக செயல்பட அவரை கட்சியிலிருந்து நீக்கினார் எடப்பாடி பழனிச்சாமி. அதோடு சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரை கட்சிக்குள் வராமலும் அவர் பார்த்துக் கொண்டார்.
 
அதேபோல், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனும் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக செயல்பட தொடங்கினார். எனவே, அவரையும் கட்சியிலிருந்து நீக்கிவிட்டார் எடப்பாடி பழனிச்சாமி. அதன்பின் செய்தியாளரிடம் பேசிய செங்கோட்டையன் ‘அதிமுகவை ஒருங்கிணைக்க சொன்னது பாஜக தலைமைதான். அதிமுகவில் தற்போது அரவணைத்து யாரும் செல்வதில்லை. எல்லாவற்றையும் கட்சியை விட்டு நீக்குகிறார்கள். கொல்லைப்புறமாக வந்து முதல்வர் ஆனவர் எடப்பாடி பழனிச்சாமி. அதிமுகவிலும் அரசியல் இருக்கிறது’ என்றெல்லாம் பேட்டி கொடுத்தார்.
 
தற்போது அதிமுக கூட்டணியில் பாஜக இருக்கும் நிலையில் ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோரை எல்லாம் சேர்த்து அதிமுகவை பலமாக்கி தேர்தலில் திமுகவை தோற்கடிக்க வேண்டும் என பாஜக நினைக்கிறது. ஒருபக்கம், அதிமுகவை ஒருங்கிணைக்க சொன்னது பாஜகதான் என செங்கோட்டையன் சொன்னது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் அதற்கு கருத்து சொல்ல மறுத்துவிட்டார் எடப்பாடி பழனிச்சாமி.
 
இந்நிலையில் இது தொடர்பாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு ‘மற்றொரு கட்சி விவகாரத்தில் பாஜக தலையிடாது’ என அவர் பதில் அளித்திருக்கிறார்.