வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 4 ஜூன் 2019 (15:34 IST)

பைக்குள் கிடந்த குழந்தை: கடித்து குதறிய நாய்கள்

சென்னையில் உள்ள திருவள்ளூர் பகுதியில் திருநங்கை ஒருவர் டீக்கடையில் டீ குடித்து கொண்டிருக்கிறார். அப்போது அந்த பகுதியின் குப்பைகள் கிடந்த பகுதியில் ஒரு பை கிடப்பதையும், அந்த பையை அங்குள்ள சில நாய்கள் கடிப்பதையும், இழுப்பதையும் பார்த்திருக்கிறார். அவருக்கு சந்தேகம் ஏற்படவும் டீக்கடைக்காரருடன் அருகில் சென்று நாய்களை விரட்டிவிட்டுவிட்டு பையை திறந்து பார்த்திருக்கிறார். அதில் பிறந்து சில நாட்களே ஆன ஆண் குழந்தை துணியில் சுற்றப்பட்டு இருப்பதை பார்த்த அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதன் அருகில் கொஞ்சம் வேப்பிலை கொழுந்தையும் வைத்திருக்கின்றனர் குழந்தையை தூக்கி போட்டவர்கள்.

இதுகுறித்து உடனடியாக ஊத்துக்கோட்டை காவல்நிலையத்துக்கு தகவல் அளிக்கப்பட்டதும், அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து குழந்தையை மீட்டு அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். குழந்தை தற்போது நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சுற்றுவட்டாரத்தில் ஆண் குழந்தை பிறந்த உடனே அங்கிருந்து யாராவது அனுமதியின்றி வெளியேறினார்களா என்று விசாரித்தும் வருகின்றனர். பிறந்த சில மணி நேரத்திலேயே குழந்தையை பையில் வைத்து வீசி சென்ற சம்பவம் திருவள்ளூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.