புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 18 ஏப்ரல் 2019 (19:59 IST)

'சர்கார்' விழிப்புணர்வு எதிரொலி: 49P விதியில் ஓட்டு போட்ட வாக்காளர்

தளபதி விஜய் நடித்த 'சர்கார்' திரைப்படம் வெளிவந்த பின்னர்தான் தேர்தல் விதிமுறைகளில் 49P என்ற ஒரு பிரிவு இருப்பதே தெரிய வந்தது. அதாவது ஒருவரது வாக்கை இன்னொருவர் கள்ள ஓட்டாக போட்டுவிட்டாலும் தேர்தல் அதிகாரியின் அனுமதி பெற்று 49P என்ற பிரிவு விதியின்படி அந்த நபர் ஓட்டு போடலாம். இப்படி ஒரு விதி இருப்பதை ஏ.ஆர்.முருகதாஸ் தனது 'சர்கார்' படத்தின் மூலம் மக்களுக்கு தெரியப்படுத்தினார். மேலும் தேர்தல் ஆணையமும் இந்த விதியை இம்முறை விளம்பரம் செய்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியது
 
இந்த நிலையில் இந்த விழிப்புணர்வு காரணமாக நெல்லையை சேர்ந்த ஒரு வாக்காளர் இன்று வாக்களித்துள்ளார். நெல்லை மாவட்டம் பணகுடி என்ற பகுதியில் உள்ள வாக்குச்சாவடி எண் 48ல் மணிகண்டன் என்பவர் தனது வாக்கை பதிவு செய்ய வந்தார். ஆனால் அவரது வாக்கை அவருக்கு முன்னதாக மற்றொருவர்  கள்ள ஓட்டு போட்டது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து, மணிகண்டன் தேர்தல் அதிகாரியிடம் புகார் தெரிவிக்க, தேர்தல் அதிகாரியின் உத்தரவின் பேரில் 49P தேர்தல் விதிப்படி அவர் வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டது. 
 
ஒரே ஒரு திரைப்படம் இந்த அளவுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளது என்றால் உண்மையில் அந்த படக்குழுவினர்களுக்கு இது பெருமையான விஷயமே. இனிவரும் காலங்களிலும் 49P என்பது மக்களிடம் பெரும் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது