நீட் ஆள்மாறாட்டம் விவகாரம்: முக்கிய இடைத்தரகர் சிக்கினார்
சமீபத்தில் நடைபெற்ற நீர் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து உதித்சூர்யா என்ற மாணவன் தேனி மருத்துவக் கல்லூரியில் மெடிக்கல் சீட் பெற்றதாக வெளிவந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழகத்தை மட்டுமின்றி இந்தியாவையே உலுக்கிய இந்த விவகாரத்தில் உதித்சூர்யா மட்டுமின்றி மேலும் பல மாணவர்கள் இதேபோல் ஆள்மாறாட்டம் செய்து மெடிக்கல் சீட் பெற்றதாக செய்திகள் வெளிவந்தது
இதனை அடுத்து கோவை, சேலம் உள்பட பல பகுதியில் உள்ள மாணவர்கள் தீவிர விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் நீட் தேர்வு ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட இடைத்தரகர்களை பிடிக்க சிபிசிஐடி போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வந்தனர்
கேரளா உள்பட நாடு முழுவதும் இதற்கென பல இடைத்தரகர்கள் இருப்பதாகவும், அவர்களை பிடித்தால் இன்னும் பல உண்மைகள் வெளிவரும் என்றும் சிபிசிஐடி வட்டாரங்கள் கூறின. இந்த நிலையில் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த விவகாரத்தில் வேலூர் திருப்பத்தூர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் என்பவரை சிபிசிஐடி போலீசார் தற்போது பிடித்துள்ளனர். அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் அளிக்கும் தகவலின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகளை சிபிசிஐடி போலீசார் எடுக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது