வெள்ளி, 5 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By BALA
Last Updated : வெள்ளி, 5 டிசம்பர் 2025 (18:31 IST)

பாஜகவுடன் இணக்கமா?!... நாஞ்சில் சம்பத் கேள்விக்கு விஜய் சொன்ன பதில்

vijay
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஏற்கனவே விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த நிலையில் மதிமுக, அதன்பின் திமுக என பயணித்து வந்த அரசியல் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் இன்று விஜயை நேரில் சேர்ந்து அவர் தமிழக வெற்றிக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். அதன்பின் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

கடந்த 6ஆண்டுகளாக நான் எந்த கட்சியிலும் இல்லாமல் பெரியார் மற்றும் அண்ணாவின் லட்சியங்களை பேசிக் கொண்டிருந்தேன். விஜயை நான் சந்தித்ததும் ‘நான் உங்கள் ரசிகன்’ என்று சொன்னார். கரூர் விவகாரத்தில் நான் விஜய்க்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்ததால் அறிவாலயத்தில் பலரும் என்னை திட்டினார்கள். வள்ளுவர் கோட்டத்தில் நடந்த அறிவு திருவிழாவில் என்னை திட்டமிட்டு நிராகரித்தார்கள். கரு.பழனியப்பன் என்னை நக்கலடித்தார். சுப.வீரப்பனும் என்னை மேடையில் வசை பாடினார். அதனால் என் மனம் உடைந்து போனது.

என் நிகழ்ச்சிகளை ரத்து செய்தார்கள். விஜய்க்கு ஆதரவாக பேசியதால் என்னை மிரட்டுகிறார்கள்.. அதனால்தான் பெரியாரையும் அம்பேத்காரையும் முன்னிறுத்தும் விஜயிடம் வந்து விட்டேன். லட்சக்கணக்கான இளைஞர்களை மூலதனமாக கொண்டிருக்கிறது தமிழக வெற்றிக்கழகம் என்று பேசினார்

மேலும் ‘நீங்கள் பாஜகவை விமர்சிப்பது இல்லை. அந்த கட்சியுடன் இணக்கமாக இருக்கிறீர்கள் என்று பலரும் உங்களை விமர்சிக்கிறார்களே’ என்று கேட்டேன். அதற்கு அவர் ‘இப்போது ஆட்சியில் இருப்பவர்களைத்தான் நாம் வலுவாக எதிர்க்க வேண்டும். தேவை வரும்போது பாஜகவை பார்த்துக் கொள்வோம்’ என்று என்னிடம் சொன்னார்’ என் பேசி இருக்கிறார் நாஞ்சில் சம்பத்.