1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: வெள்ளி, 17 நவம்பர் 2017 (15:26 IST)

தமிழக அமைச்சர்கள் எடுபிடிகள்: நாஞ்சில் சம்பத் ஆவேசம்!

தமிழக அமைச்சர்கள் எடுபிடிகள்: நாஞ்சில் சம்பத் ஆவேசம்!

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கோவை திருப்பூர் மாவட்டங்களில் ஆய்வு நடத்தியது பூதாகரமாக வெடித்துள்ளது.  ஆளுநரின் இந்த நடவடிக்கை சட்டத்தை மீறிய வரம்பு மீறிய செயலாகும் என பலரும் கண்டித்து வருகின்றனர்.


 
 
ஆளுநர் ஆய்வு செய்ததை எதிர்க்கட்சிகள் கண்டித்தாலும், எதிர்க்க வேண்டிய ஆளும் கட்சியோ அதனை வரவேற்கிறது. தமிழக அமைச்சர்கள் அதனை வரவேற்று பேசுகின்றனர். ஆளுநர் ஆய்வு செய்ததை டேக் இட் ஈசியாக எடுத்துக்கொள்ள வேண்டும் என கூறுகிறார் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்.
 
ஆளுநர் ஆய்வு செய்தால் தான் தமிழக அரசின் செயல்பாடுகள் அவருக்கு தெரியும், மத்திய அரசிடம் இருந்து அதிக திட்டங்களை பெற்று தருவார் என பேசுகிறார் அமைச்சர் செல்லூர் ராஜூ. இப்படி ஆளும் கட்சி ஆளுநரின் ஆய்வுக்கு ஆதரவாக பேசுவது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்நிலையில் ஆளும் கட்சியை சேர்ந்த அமைச்சர்களின் இந்த நிலைப்பாட்டை தினகரன் அணியை சேர்ந்த நாஞ்சில் சம்பத் கடுமையாக விமர்சித்துள்ளார்.
 
ஆளுநரின் செயல்பாடுகள் மற்றும் தமிழக அமைச்சர்களின் ஆதரவு பற்றி இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த நாஞ்சில் சம்பத், ஆளுநர் என்பவர் சட்ட விதிகளுக்குட்பட்டு நடக்க வேண்டும். ஆளுநர் ஆய்வு நடத்தியதை தமிழக அரசும் அமைச்சர்களும் வரவேற்றதில் ஆச்சர்யமில்லை. இவர்கள் மத்திய அரசின் எடுபிடிகளாகச் செயல்படத்தொடங்கி நீண்டகாலம் ஆகிவிட்டது என்றார்.
 
மேலும் நடப்பவைகளை பார்க்கும் போது, ஆளுநர் ஆட்சிக்கு ஒத்திகை நடக்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. தமிழகத்தில் ஒரு குடும்பத்தை குறிவைத்து நடந்த வருமான வரி சோதனைக்கு பின்னணியில் மிகப்பெரிய அரசியல் விளையாட்டு உள்ளது எனவும் நாஞ்சில் சம்பத் கூறினார்.