1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: வியாழன், 20 ஏப்ரல் 2017 (14:19 IST)

தினகரனுக்காக என்னை காறி துப்பினாலும் துடைத்துக்கொள்வேன் - நாஞ்சில் சம்பத்

தினகரனை புகழ்ந்து பேசுவதற்காக மக்கள் என்னை காறித் துப்பினாலும் அதை துடைத்துக் கொள்வேன் என, அதிமுக பிரச்சாரப் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் அதிரடி கருத்தை தெரிவித்துள்ளார்.


 

 
மதிமுகவில் அங்கம் வகித்த நாஞ்சில் சம்பத், வைகோவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமகா அதிமுகவில் இணைந்தார். அதன் பின் ஜெ.வின் விசுவாசியாக இன்னோவா காரில் வலம் வந்தார். ஜெ.வின் மறைவிற்கு பின், அனைவரும் சசிகலாவை முன்னிறுத்திய போது “சசிகலாவுக்கு மட்டுமே தலைமை தாங்கத் தகுதி உள்ளது என்று முடிவெடுத்துவிட்டார்கள். நிழல் நிஜமாகிவிட்டது. தாழ்வாரம் வீடாகிவிட்டது. தவிடு நெல்லாகிவிட்டது. பொல்லாச் சிறகுள்ள வான்கோழி ஒரே நாளில் தோகை மயிலாகிவிட்டது. யார் உட்கார்ந்த நாற்காலியில் யார் உட்காருவது என்பதை நினைத்தாலே தூக்கம் வரவில்லை. அவரை ஏற்றுக் கொள்வதற்கான எந்த தகுதியும் எனக்கு இல்லை” எனக் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.  
 
மேலும், ஜெ. தனக்கு அளித்த இன்னோவா காரின் சாவியையும் ஒப்படைத்து விட்டதாக கூறினார். அதன் பின் அவரை அழைத்து கார்டன் வட்டாரம் பேசியது. அதன் பின் மீண்டும் இன்னோவா காரின் சாவியை வாங்கிக் கொண்டு, சசிகலா புகழ் பாடினார். சசிகலா சிறைக்கு சென்ற பின், தினகரனின் ஆதரவாளராக மாறினார்.  அவரை தீரன், திண்ணியன், காலம் தந்த தலைவன் என்றெல்லாம் பாராட்டித் தள்ளினார். 
 
சசிகலாவிற்கு எதிராக ஓ.பி.எஸ் களம் இறங்கிய பின் அவரை திட்டி தீர்த்து வந்தார். ஆனால், சசிகலா குடும்பத்தினரை கட்சியிலிருந்து விலக்கி வைப்பதாக அதிமுக அமைச்சர்கள் முடிவெடுத்த பின், அதிமுகவிலிருந்து தினகரன் விலக வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.  
 
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய நாஞ்சில் சம்பத் “ தினகரனை பாராட்டுவதற்காக என்னை மக்கள் காறித் துப்பினாலும் துடைத்துக் கொள்வேன்” எனக் கூறினார். ஒருவேளை நீங்கள் ஓ.பி.எஸ் அணியில் இருக்க நேர்ந்தால் என்ன செய்வீர்கள் என நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதிலளித்த அவர் “ செத்திருவேன். அப்படியே தற்கொலை செய்து கொள்வேன்” எனக் கூறி அதிர வைத்தார்.
 
இதன் மூலம், இவர் ஓ.பி.எஸ் அணியோடு இணைய மாட்டார் என்பது தெரியவந்துள்ளது.