புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 27 ஜூன் 2019 (13:21 IST)

சின்னாத்தாவால் கழகத்தில் நுழைந்த கிரிமினல்.. தினகரனை வெளுத்து வாங்கிய நமது அம்மா!

தங்க தமிழ்ச்செல்வன் தினகரனை விமர்சித்து அமமுகவில் இருந்து நீக்கப்பட உள்ள நிலையில், நமது அம்மா நாளிதழ் தினகரனை விமர்சித்து கட்டுரை ஒன்று எழுதியுள்ளது. 
 
அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான நமது அம்மாவில் அண்ணன் யோக்கியத.. இன்னுமா புரியல.. என்ற தலைப்பில் டிடிவி தினகரனை விமர்சித்து கட்டுரை ஒன்று வெளியாகியுள்ளது. அந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள சில உங்கள் பார்வைக்கு... 
 
கள்ளை பால் என்று நம்பிய நம் கருணைத் தாயின் வெள்ளை உள்ளத்தால் பெரியகுளம் தொகுதிக்கு எம்பியாக்கப்பட்டார் தினகரன். ஆனால் அடுத்த வந்த தேர்தலில் அதே தொகுதியில் தோற்று போன தினகரனை மாநிலங்களவைக்கு அனுப்பி வைத்தார் நம் மகராசி அம்மா. 
அதன் பின்னர் திமுகவுடனான துரோக தொடர்புகளும், அம்மாவுக்கே எதிராக தினகரன் மேற்கொண்ட வஞ்சக நடவடிக்கைகளும் ஒரு நாள் தெளிவாகவே புரிந்து விட்ட நிலையில் உக்கிரமாய் எச்சரிக்கப்பட்டு தமிழ்நாட்டு எல்லைக்குள்ளேயே தலைகாட்டக் கூடாது என்கிற உத்தரவின் பேரில் பாண்டிச்சேரி பக்கமாக பத்திவிடப்பட்டார் மேற்படு ஃபெரா பேர் வழி தினகரன்.
 
அதனைத் தொடர்ந்து 10 ஆண்டு காலம் பதுங்கு குழி வாழ்க்கை. எப்போது அம்மா காலியாவார். திண்ணை கைகூடும் என்று காத்து கிடந்த தினகரன் நம் கருணைத் தாயின் மறைவுக்கு பிறகு சிறைக்கு புறப்பட்ட சின்னாத்தாவால் கழகத்தின் துணை பொதுச் செயலாளர் என்று அறிவிக்கப்பட்டார். 
வந்த வேகத்தில் ஆர்கே நகருக்கு வேட்பாளர் என்று அறிவித்துக் கொண்டார். தனது வெகுநாள் அனுபவமான ஹவாலாவோடு தேர்தல் அரசியலை கலந்து ஒட்டுமொத்த வாக்காளர்களையும் ஏமாற்றி ஆர்கே நகரில் வெற்றி பெற்றார். 
 
தந்திரத்தாலே பிழைப்பவன் ஒரு நாள் அந்திரத்தில் நிற்பான் என்பது போல், தினகரன் என்கிற கிரிமினல் பின்னணி அரசியல்வாதிக்கு தமிழ் மண்ணில் இடமில்லை என்பதை ஒட்டு மொத்த தமிழினமும் தங்களது வாக்களிப்பு மூலம் உரக்கச் சொன்னது.
 
கோடான கோடிகளை வாரி இரைத்து ஊடகங்கள் மூலம் தினகரன் உருவாக்கிய மாயை ஊர்ஜனங்களால் சுக்கு நூறாகக்கப்பட்டது. மக்கள் திலகமும், மகராசி அம்மாவும் மடி வளர்த்த கழகத்தை ஒருநாளும் மாஃபியாக்களால் வழிநடத்த முடியாது. 
அவர்கள் வழி நடத்தவும் கூடாது என்ற தெளிவான முடிவை எடுத்து திசை மாறிப் போன பறவைகள் அனைத்தும் கழகம் என்கிற தாய்க் கூடு திரும்ப தொடங்கிவிட்டனர். இப்போது தினகரன் குடும்பத்தால் நடத்தப்படும் ஐடி நிறுவனம் மூலம் வாட்ஸ் ஆப், பேஸ்புக் மூலம் மட்டுமே உயிர் வாழ்கிற கடுகளவு இயக்கமாகி விட்டது அமமுக.
 
ஆனாலும் இத்தனை விவரங்களும் இப்போதுதான் புரிந்தவராக அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளராக இருக்கும் தங்க தமிழ்ச் செல்வன், தினகரன் ஒரு தீவிரவாத தலைவர் போல் செயல்படுகிறார் என்றும் காலம் கடந்து பெற்ற ஞானம் போல பேசுவது வேடிக்கையாகவும்தான் இருக்கிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.